ஷா ஆலம், மார்ச் 10 – எதிர்வரவிருக்கும் ஐடில்ஃபித்ரி பண்டிகையை முன்னிட்டு, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளதால் மக்கள் பீதியடைந்து அதிகப்படியான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி அறிவுறுத்தியுள்ளார்.
அம்பாங்கில் உள்ள தாமான் தாசேக் தம்பாஹான் பொழுதுபோக்குத் திடலில் நடைபெற்ற 'ஹரி ராயா பண்டிகைகால உச்ச விலைத் திட்டம்' (SHMMP) மற்றும் 'ரஹ்மா மடாணி விற்பனை' (PJRM) தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்ய அமைச்சகம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதில் குறிப்பாக, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சும் (KPKM) தொழில்துறை சார்ந்தவர்களும் இணைந்து மேற்கொண்ட ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, பண்டிகை காலத்திற்குப் பின்னரும் நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய மோதல்கள் மற்றும் சீரற்ற வானிலை போன்ற காரணிகளால் விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலைகள் நிலவினாலும், முக்கியப் பொருட்களின் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை கவுன்சில் (NACCOL) கூட்டத்தில், தற்போதைய நிலையில் முக்கியப் பொருட்களின் இருப்பு தேவையை விட அதிகமாகவே இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அர்மிசான் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய மோதல்கள் அல்லது ஏற்றுமதித் தடைகளால் நாட்டில் உணவு விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் (MITI) ஒத்துழைப்புடன் அவசரக்காலத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் டத்தோ அர்மிசான் தெரிவித்துள்ளார்.
போர்ச் சூழல் நீடித்தாலோ அல்லது மூல நாடுகளிலிருந்து ஏற்றுமதி நிறுத்தப்பட்டாலோ, மாற்று நாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.
சீரற்ற வானிலை காரணமாகச் சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது குறித்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், மக்களின் சுமையைக் குறைக்க முக்கியக் காய்கறி வகைகள் 'ஹரி ராயா பண்டிகைகால உச்ச விலைத் திட்டத்தின்' (SHMMP) கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் எதிர்வரும் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மார்ச் 28-ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இதன் மூலம் பண்டிகை கொண்டாட்டங்களின் போது அத்தியாவசியப் பொருட்களின் விலை அநியாயமாக உயர்த்தப்படுவது தடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான உச்ச விலைத் திட்டத்தில் மொத்தம் 27 வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு (Kacang Dal) ஒரு புதிய அங்கமாக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில், ரமலான் மாதம் முழுவதும் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய, நாடு தழுவிய அளவில் 1,898 இடங்களில் 'ரஹ்மா மடாணி' விற்பனைத் திட்டங்கள் (PJRM) முன்னெடுக்கப்படும். இந்தச் சிறப்பு விற்பனையில் குறைந்தது 50 வகையான அத்தியாவசியப் பொருட்கள் மலிவு விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.








