நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜெ.இ.ஆர்: மலிவு விற்பனையில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் 1,000 கோழிகள் விற்பனை
அம்பாங் ஜெயா, மார்ச் 7: சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (PKPS), எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களின் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இந்த மார்ச் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மெகா நோன்புப் பெருநாள் ரஹ்மா அன்பளிப்பு விற்பனையை (JER) ஏற்பாடு செய்யும்.
மாநில விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர், டத்தோ ஐஆர் இஷாம் ஹாஷிம், இந்த மலிவு விலை விற்பனைத் திட்டம் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் என்று கூறினார்.
"மார்ச் 14 ஆம் தேதி, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிஜாங்காங், பத்தாங் காலி, தஞ்சோங் சிப்பாட் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகிய இடங்களில் இந்தத் திட்டம் நடைபெறும்."
"மார்ச் 15 ஆம் தேதி, இதே நேரத்தில் சபாக், சுங்கை துவா, பத்து தீகா மற்றும் பாண்டான் இண்டா ஆகிய இடங்களில் நடைபெறும்," என்று கம்போங் பாண்டான் டாலமில் உள்ள மஸ்ஜித் நூருல் ஹிதாயாவில் நடைபெற்ற ‘ஜெலாஜா செந்துஹான் காசிஹ் ரமலான்’ நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேலும், ஒவ்வொரு விற்பனை இடத்திலும் 1,000 கோழிகளை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் வழங்கும் என்றும், இது முந்தைய 400 கோழிகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்றும் அவர் கூறினார்.
"மற்ற அத்தியாவசியப் பொருட்களும் 20 முதல் 30 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்கப்படும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிலாங்கூரில் உணவுப் பொருட்களுக்குப் போதுமான கையிருப்பு இருப்பதாக இஷாம் ஹாஷிம் உறுதி அளித்தார்.
கோழி, இறைச்சி போன்ற முக்கியப் பொருட்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதாகவும், இதுவரை எந்தப் பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பண்டிகைக் காலங்களில் பொருட்களின் கையிருப்பு மற்றும் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்ய மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது."
"பண்டிகைக் காலங்களில் நுகர்வோருக்கு உதவும் வகையில், சில தரப்பினர் தாமாக முன்வந்து பொருட்களின் விலையைக் குறைத்துள்ளனர்," என்றார் அவர்.
மற்றோர் நிலவரத்தில், மத்திய கிழக்கு மோதல்களால் உலகளவில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையின் காரணமாக உணவுப் பொருட்களின் விலை மற்றும் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணிக்க, மாநில அரசு கூட்டரசு அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.
"சம்பந்தப்பட்ட நாடுகள் (ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா) எண்ணெய் உற்பத்தியில் கவனம் செலுத்தினாலும், மோதல்களால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்."
"விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிலையை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரிசி, இறைச்சி, கோழி, மீன் போன்ற உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் உணவு கிடங்கு ஒன்றையும் மாநில அரசு கொண்டுள்ளது," என்றார்.
மத்திய கிழக்கு மோதல்களைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சிலாங்கூர் ஃபாமா மற்றும் கோஹிஜ்ரா கூட்டுறவுக் கழகம் போன்ற தொடர்புடைய முகவர் நிலையங்கள் உணவுப் பொருட்களின் கையிருப்பை அதிகரிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.




