கிள்ளான்: நாட்டின் மிகப்பெரிய மொத்த விற்பனை மையமான ஜிஎம் கிள்ளான், மாற்றுத்திறனாளி (OKU) தொழில் முனைவோருக்கு வருமானம் ஈட்டவும், அவர்களின் சந்தையை விரிவுபடுத்தவும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு ரமலான் மற்றும் ஈகைத் திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள 'ரம்லான் பஜார்' மற்றும் 'ரியோவ் ராயா பஜார்' மூலம் இந்த வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
இந்த முயற்சி, சிலாங்கூர் மை ஓகேயு (MyOKU) தொழில்முனைவோர் கூட்டுறவுக் கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளப் படுவதாக ஜிஎம் கிள்ளானின் வர்த்தகத் தொடர்பு நிர்வாகி, நுர்ஹானி யாஸ்மீன் முகமட் ஜைனான் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி சமூகத்தை உள்ளடக்கிய வளர்ச்சியை வலுப்படுத்தும் தங்களின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
"மாற்றுத்திறனாளி சமூகத்துடன் நாங்கள் மேற்கொள்ளும் முதல் ஒத்துழைப்பு இதுவாகும். இந்த ரமலான் பஜார் மூலம் அவர்கள் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கவும் ஒரு தளத்தை நாங்கள் வழங்குகிறோம்," என்று அவர் கூறினார்.
"ஒவ்வொரு வியாபாரியும் பல்வேறு பாரம்பரிய மற்றும் நோன்பு துறப்பதற்கான உணவுகளை விற்பனை செய்கிறார்கள். இது இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகளை வழங்குகிறது," என்று ஜிஎம் கிள்ளானில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் பல்வேறு தரப்பினருடனும் மாற்றுத்திறனாளி சமூகத்துடனும் தொடர்ந்து ஒத்துழைக்க ஜிஎம் கிள்ளான் தயாராக இருப்பதாகவும், மேலும் அதிகமானோரை வரவேற்பதாகவும் நுர்ஹானி யாஸ்மீன் கூறினார்.
இதற்கிடையில், சிலாங்கூர் மைஓகேயு தொழில்முனைவோர் கூட்டுறவுக் கழகத்தின் தலைவர் முகமது அஷ்ரப் மஹத், மாற்றுத் திறனாளி தொழில்முனைவோர் வணிக நடவடிக்கைகள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பளித்த ஜிஎம் கிள்ளானின் ஆதரவைப் பாராட்டினார்.
"ஜிஎம் கிள்ளான், ஒரு மாதத்திற்கான கடை வாடகையில் 25 விழுக்காடு தள்ளுபடியை வழங்கியுள்ளது. இது மாற்றுத்திறனாளி தொழில்முனைவோரின் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது," என்றார்.
"எனவே, இந்த ரமலான் மாதம் முழுவதும் மாற்றுத்திறனாளி தொழில்முனைவோரின் மொத்த விற்பனை சுமார் RM500,00-ஐ எட்டும் என்று நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு வியாபாரியும் தினசரி RM900 முதல் RM1,000 வரை விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
வியாபாரிகளில் ஒருவரான முகமட் நோர் பைசால் முகமட் சைட், 35, கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் நிலை லிம்போமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், வருமானம் ஈட்ட இந்த பஜார் ஒரு புதிய நம்பிக்கையை அளிப்பதாகக் கூறினார். தற்போது சிகிச்சையில் இருப்பதால், நிரந்தர வருமானம் இல்லாமல் தனது மனைவியுடன் சிறிய அளவில் நாசி லெமாக் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
"ஜிஎம் கிள்ளானில் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு எனது வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன். வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பும் மிகவும் ஊக்கமளிக்கிறது," என்றார் அவர்.
மற்றொரு வியாபாரியான சித்தி பாதிமா ஜைனல், 46, மாற்றுத்திறனாளிகள் நிரந்தர வேலை பெறுவதில் சிரமங்களை எதிர் கொள்வதால் இந்த வாய்ப்பு மிகவும் அர்த்தமுள்ளது என்றார். எட்டு ஆண்டுகளாக ஸ்கிசோஃப்ரினியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு, 15 வயதில் அறிவுசார் மாற்றுத் திறனாளி மகனும் உள்ளார். இதற்கு முன்பு, அவர் இரவுச் சந்தைகளில் மட்டுமே வியாபாரம் செய்து வந்தார்.
"இந்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜிஎம் கிள்ளான் ரமலான் பஜாரில் வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளேன். இது எனது குடும்ப வருமானத்தை அதிகரிக்க உதவும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
ஜிஎம் கிள்ளான் ரமலான் பஜார் தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இதில் 15 மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் உட்பட 35 உள்ளூர் தொழில்முனைவோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான பாரம்பரிய மற்றும் நோன்பு துறக்கும் உணவுகளை வழங்குகிறார்கள்.
அதே நேரத்தில், வளாகத்தைச் சுற்றி நடைபெறும் ரியோவ் ராயா பஜாரில், பண்டிகைக் கால ஆடைகள், அணிகலன்கள், சிற்றுண்டிகள், இனிப்பு வகைகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு பெருநாள் தேவைகள் விற்பனை செய்யப் படுகின்றன.






