நோன்பு பெருநாளின் போது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சீராக உள்ளது - டத்தோஸ்ரீ முகமட் சாபு உறுதி

7 மார்ச் 2026, 3:32 AM
நோன்பு பெருநாளின் போது அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் சீராக உள்ளது - டத்தோஸ்ரீ முகமட் சாபு உறுதி

கோத்தா பாரு, மார்ச் 7- எதிர்வரும் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முட்டை, இறைச்சி, கோழி, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் இருப்பு போதுமான அளவில் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமோ அல்லது பதற்றமோ அடையாமல், தேவையற்ற முறையில் பொருட்களைக் குவித்து வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் உணவுப் பொருட்கள் விநியோகம் தற்போதுவரை மிகவும் சீராகவும் கட்டுக்கோப்பாகவும் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

துன்ஜோங்கில் உள்ள கிராமப்புற உருமாற்ற மையத்தில் (RTC) நடைபெற்ற அமைச்சின் 'சகாயா ஐடில்பித்ரி' தொழில்முனைவோர் திருவிழா மற்றும் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேங்காய் பால் (சந்தான்) போன்ற சில குறிப்பிட்ட பொருட்களுக்கான தேவை மட்டும் தற்போது அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, மலேசிய மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் (FAMA) அவ்வப்போது கூடுதல் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும், இந்தத் தொழில்முனைவோர் திருவிழாவின் வாயிலாக சுமார் 750,000 ரிங்கிட் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இது சிறு மற்றும் நடுத்தர விவசாயத் தொழில்முனைவோரின் பொருளாதாரத்தை நேரடியாக மேம்படுத்த உதவும் என்றார்.

அரசாங்கம், அரசு முகமைகள் மற்றும் தொழில்முனைவோர் சமூகத்திற்கு இடையிலான உறவை இந்த ரமலான் மாதத்தில் இத்தகைய நிகழ்வுகள் மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.