அலோர் ஸ்டார், மார்ச் 6 — ஐபிஓ (IPO) போலி முதலீட்டு திட்ட மோசடியில் சிக்கி, தனியார் துறை மருத்துவர் ஒருவர் RM3.8 மில்லியன் இழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் கோத்த ஸ்டார் மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் பெறப்பட்டதாகக் கெடா வணிக குற்றப்புலனாய்வு துறை தலைவர் சூப்பிரிண்டெண்ட் ஷாம்சுல் அனுவார் சாட் தெரிவித்தார்.
60 வயதுடைய அந்த நபர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அலோர் ஸ்டாரில் உள்ள ஜாலான் புத்ரா பகுதியில் தனது பணியிடத்தில் இருந்தபோது, முகநூலில் JMC Capital நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்து முதலீட்டில் ஈடுபட ஆர்வம் கொண்டதாக ஷாம்சுல் கூறினார்.
“முதலீடு செய்த தொகையில் இரண்டு வாரங்களில் 50 சதவீத லாபம் கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவருக்கு உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ‘JMC Capital’ எனப்படும் வாட்ஸ்அப் குழுவிலும் சேர்க்கப்பட்டார்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த உறுப்பினர்களும், இந்த முதலீடு அதிக லாபத்தை அளிக்கும் என்று பாதிக்கப்பட்டவரை நம்பவைத்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் 2025 நவம்பர் 4 முதல் 2026 பிப்ரவரி 4 வரை, ஒன்பது வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 49 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM3,805,010 பணத்தை அனுப்பியுள்ளார்.
“வாக்குறுதியளிக்கப்பட்டபடி எந்தவித லாபமும் கிடைக்காதபோது தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்,” என்று ஷாம்சுல் அனுவார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இணைய வழி முதலீட்டு சலுகைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், முதலீடு செய்யும் முன் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி பெற்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.







