சிலாங்கூர் மாநிலம் RM83.9 பில்லியன் முதலீடுகளை ஈர்த்து சாதனை

6 மார்ச் 2026, 8:21 AM
சிலாங்கூர் மாநிலம் RM83.9 பில்லியன் முதலீடுகளை ஈர்த்து சாதனை

ஷா ஆலாம், மார்ச் 6- சிலாங்கூர் மாநிலம் 2025-ஆம் ஆண்டில் RM83.9 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, தனது பொருளாதார வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.

வெறும் எண்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு வித்திடும் உயர்தரத் திட்டங்களை ஈர்ப்பதில் சிலாங்கூர் அரசு காட்டி வரும் தீவிர முனைப்பை இந்த சாதனை பிரதிபலிக்கிறது.

இந்த முதலீட்டு வளர்ச்சி குறித்துப் பேசிய முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், மாநில அரசின் முன்னுரிமை வெறும் புள்ளிவிவரங்களில் மட்டும் இல்லை என்று குறிப்பிட்டார்.

மாறாக, உள்ளூர் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நீடித்த பலன்களை வழங்கக்கூடிய முதலீடுகளுக்கே சிலாங்கூர் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

"எங்களின் நோக்கம் எண்களைத் துரத்துவது அல்ல; மாறாக, உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்துறை கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை ஈர்ப்பதே ஆகும்.

சிலாங்கூருடன் இணைந்து நீண்டகால அடிப்படையில் வளர்ச்சியடைய விரும்பும் பங்காளிகளை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்," என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் இந்த வெற்றிக்குத் துணையாக இருந்த மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (MIDA), இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor) மற்றும் சிடெக் (Sidec) ஆகிய நிறுவனங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த முகமைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே சிலாங்கூரை நாட்டின் முதன்மை முதலீட்டுத் தளமாக நிலைநிறுத்தியுள்ளதாக அவர் புகழாரம் சூட்டினார்.

மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (MIDA) இன்று வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, மலேசியா ஒட்டுமொத்தமாக RM285.2 பில்லியன் முதலீடுகளை அங்கீகரித்துள்ளது.

இது 2024-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 13.2 சதவீத வளர்ச்சியாகும். இதில் சேவைத் துறை 65.9 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கிறது; உற்பத்தித் துறை 32.9 சதவீத முதலீடுகளைப் பெற்றுள்ளது.மாநில அளவிலான வரிசையில், 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஜோகூர் மாநிலம் RM91.1 பில்லியனுடன் முதலிடத்தைப் பிடித்தது.

சிலாங்கூர் RM51.9 பில்லியனுடன் இரண்டாம் இடத்திலும், கோலாலம்பூர் (RM45.9 பில்லியன்), பினாங்கு (RM23.7 பில்லியன்) மற்றும் கெடா (RM17.5 பில்லியன்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.