அம்பாங் ஜெயா, பிப் 26- சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று மாலை அம்பாங் ஜெயாவில் உள்ள தாமான் மெலாவாத்தி ரமலான் பசாருக்கு நேரில் வருகை தந்து அங்கிருந்த வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் புபுர் லம்புக் மற்றும் பேரீச்சம்பழங்களை விநியோகம் செய்தார்.
அப்பகுதியில் பலத்த மழை பெய்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு நேரத்தை செலவிட்ட மந்திரி புசார், பொதுமக்களுடனும் வியாபாரிகளுடனும் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின் போது அங்கிருந்த பொதுமக்கள் மந்திரி பெசாருடன் உற்சாகமாக 'செல்ஃபி' புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களின் கோரிக்கைகளை அவர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
உலு கிள்ளான் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (MPAJ) செயலாளர் ஹஸ்ரோல்நிஷாம் ஷாரி ஆகியோரும் மந்திரி பெசாருடன் இந்த விநியோக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ரமலான் சந்தையைச் சுற்றி வந்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, பொதுமக்களுக்கு உணவு வழங்கியதோடு மட்டுமல்லாமல் தாமும் நோன்பு திறப்பதற்காக சில உணவுப் பண்டங்களை வியாபாரிகளிடம் விலைக்கு வாங்கினார்.
முன்னதாக நேற்று, கோல சிலாங்கூர் ரமலான் பசாரில் நடைபெற்ற 'சிங்கா பசார் மற்றும் புபுர் லம்புக் விநியோக' நிகழ்ச்சியின் போது அவர் சுமார் 1,000 புபுர் லம்புக் பொட்டலங்களை மக்களுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.








