பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் விமான சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது

6 மார்ச் 2026, 8:07 AM
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் விமான சேவைகளை மலேசியா ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது

கோலாலம்பூர், மார்ச் 6: உலகளாவிய பயணக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில், மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் மார்ச் 6 முதல் 8 வரை கோலாலம்பூர் - லண்டன் ஹீத்ரோ மற்றும் கோலாலம்பூர் - பாரிஸ் சார்லஸ் டி கோல் ஆகிய வழித்தடங்களில் கூடுதல் விமான சேவைகளை அமல்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்தத் தேசிய விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான இந்த வழித்தடங்களில் பெரிய ரக விமானங்களைப் பயன்படுத்துவதன் மூலம், குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணையவும் மற்றும் பயணிகளின் அடுத்தகட்ட பயணங்களுக்கு ஆதரவளிக்கவும் நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகள் வழியாக இந்த விமானங்கள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் மலேசியா ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. வழக்கமான தினசரி சேவைகளுடன் கூடுதலாக ‘A350-900’ ரக விமானங்கள் இந்தச் சிறப்புச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.

மேலும், பயணிகளுக்குத் தடையற்ற இணைப்புகளை வழங்க ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பிற நட்பு விமான நிறுவனங்களுடன் மலேசியா ஏர்லைன்ஸ் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது.

 தற்போதைய சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவைக்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையை மாற்றியமைக்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டங்களுக்கு இடையே ஒரு நம்பகமான இணைப்பாளராகச் செயல்படுவதோடு, மலேசிய விருந்தோம்பலுடன் கூடிய தரமான சேவையை வழங்குவதே தங்களின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் விமானப் பதிவுகளை மலேசியா ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வழியாகச் செய்துகொள்ளலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.