ஷா ஆலம், மார்ச் 4 – எதிர்வரும் ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாட்டு செலவுகளைக் குறைக்கும் ஒரு சிறப்பு முயற்சியாக, சிலாங்கூர் மாநிலச் செயலக (SUK) கட்டிடத்தில் பணிபுரியும் 90 பணியாளர்கள் இன்று 'ஜோம் ஷாப்பிங்' ஹரிராயா வவுச்சர்களை பெற்றனர்.
மாநில பொருளாதார நடவடிக்கைக் குழு (MTES) கூட்டத்திற்குப் பிறகு, சுல்தான் சாலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா (SSAAS) கட்டிடத்தின் வரவேற்புரையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த வவுச்சர்களை வழங்கினார். இந்த உதவியை பெற்றவர்களில் தூய்மைப் பணியாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு ஊழியர்கள் மற்றும் மாநிலச் செயலகத்தின் கீழ் பணிபுரியும் ஓட்டுநர்கள் ஆகியோர் அடங்குவர்.
ஒவ்வொருவருக்கும் தலா RM200 மதிப்பிலான இந்த வவுச்சர் வழங்கப்பட்டது, பண்டிகைக் காலங்களில் எந்த ஒரு ஊழியரும் விடுபடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சிறப்பு அனுமதியாகும் என்று டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் வழக்கமாக பெருநாள் உணவு கூடைகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் இந்த ஆண்டு அவர்களின் குடும்பத் தேவைக்கேற்ப பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கும் வகையில் RM200 மதிப்பிலான வவுச்சராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் மொத்தம் RM12,600 நிதி ஒதுக்கீட்டை கொண்டுள்ளதுடன், மனிதவளம், வறுமை ஒழிப்பு மற்றும் பூர்வீகக் குடி மக்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் மூலம் ஒருங்கிணைக்கப் பட்டது. அரசாங்க வசதி நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் அடிமட்டத் தொழிலாளர்களின் நலனில் மாநில அரசு கொண்டுள்ள தொடர்ச்சியான அக்கறையின் அடையாளமாக இந்த முயற்சி எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என மந்திரி புசார் விருப்பம் தெரிவித்தார். இந்த பங்களிப்பின் மூலம், அவர்கள் தங்கள் அன்புக்குரிய குடும்பங்களுடன் இந் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்











