ரவாங், பிப்26- ரவாங் பெர்டானாவில் குப்ரா அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயத்திலிருந்த சிலைகள், இன்று அதிகாலை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் அகற்றப்பட்டதாக அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த அகற்றும் பணியை ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலயக் குழுவினர் மற்றும் மலேசிய இந்து சங்கப் பிரதிநிதிகள் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தாங்களாகவே முன்வந்து முழுமையாக மேற்கொண்டதாக குப்ரா அறக்கட்டளையின் அறங்காவலர் இஸ்மாயில் மினா உறுதிப்படுத்தினார்.
சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளுக்கு மாறாக, சிலைகள் அகற்றப்படும்போது எந்தவொரு வாக்குவாதமோ அல்லது மோதலோ ஏற்படவில்லை என்றும், காவல்துறை கண்காணிப்பில் அனைத்தும் மிக நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் நடந்து முடிந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்த தவறை ஒப்புக்கொண்ட ஆலய நிர்வாகத்தினர், வழங்கப்பட்ட இரண்டு வார கால அவகாசத்திற்குள் இடத்தை காலி செய்ய முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தின் தற்போதைய நிலையைச் சிலாங்கூர் மாநில தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் இயக்குநர் மற்றும் மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அறக்கட்டளை வழங்கிய விளக்கத்தில் திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 10 பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகளின் பங்களிப்புடன் சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த அகற்றும் பணி அமைதியாக நிறைவடைந்ததைச் சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள இந்நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த ஏழை மக்களுக்கான இல்லம் கட்டும் திட்டத்தை ஓராண்டுக்குள் தொடங்க குப்ரா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.








