கோத்தா பாரு, மார்ச் 4: கிளாந்தான் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN), நேற்று தும்பாட் வட்டாரத்தில் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மூன்று வாகனங்களுடன் மூன்று டன்னுக்கும் அதிகமான மானியக் கட்டுப்பாட்டுப் பொருட்களைப் பறிமுதல் செய்தது.
இந்தப் பறிமுதலில், 2,176 கிலோகிராம் மானிய சமையல் எண்ணெய் மற்றும் 888 கிலோகிராம் சீனி ஆகியவை அடங்கும். இவை அண்டை நாட்டிற்குக் கடத்தப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. வாகனங்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM32,970.80 என கிளாந்தான் KPDN துணை இயக்குனர் அஸ்வாடி ஜாஃபர் தெரிவித்தார்.
தும்பாட், கம்போங் புனுஹானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டறிந்த பின்னர், KPDN-இன் சிறப்பு புலனாய்வு மற்றும் அதிரடிப் பிரிவு மற்றும் மூன்றாவது மண்டல கடல் போலீஸ் படையின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை 5.50 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் கூறினார்.
"சோதனையின்போது, அந்த வளாகம் சமையல் எண்ணெய் மற்றும் சீனியை மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு முன், ஒரு இடைநிலை மையமாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"அங்கு இரண்டு புரோட்டோன் இஸ்வாரா கார்கள் மற்றும் ஒரு ஹோண்டா சிஆர்வி வாகனத்தையும் அதிகாரிகள் கண்டனர். அப்போது சிலர் பொருட்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்."
இந்தச் சோதனையின்போது 50 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார், மற்ற மூன்று பேர் அருகிலுள்ள நெல் வயல் மற்றும் புதர் பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
கைவிடப்பட்ட வீட்டில் நடத்தப்பட்ட மேலதிக சோதனையில், கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த 1,207 கிலோ மானிய சமையல் எண்ணெயும் 629 கிலோ சீனியும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு புரோட்டோன் இஸ்வாரா காரில் நடத்தப்பட்ட சோதனையில் 340 கிலோ சமையல் எண்ணெயும், 288 கிலோ சீனியும் கைப்பற்றப்பட்டன.
"மற்றொரு புரோட்டோன் இஸ்வாரா காரில் 288 கிலோ சீனியும், ஹோண்டா சிஆர்வி வாகனத்தில் 312 கிலோ சீனியும் இருந்தன," என்று அவர் கூறினார். இந்த வழக்கு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.






