மாரான், 3 மார்ச் -- நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் சமீபத்திய சம்பவங்கள் குறித்து பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார்.
பகாங்கில் உள்ள ஒரு பொதுப் பல்கலைக்கழக மாணவர் குர்ஆனை அவமதித்ததாகக் கூறப்படும் சமீபத்திய சம்பவம் உட்பட, இந்த வருத்தம் பொருந்தும் என்று மாட்சிமை தங்கிய மன்னர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"இந்தச் செயல் மிகவும் அநாகரிகமானது மட்டுமல்லாமல், முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் அவமதிப்பாகும். மேலும், பரஸ்பர மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூக நல்லிணக்கத்தின் அடித்தளத்தையே இது சவால் செய்கிறது," என்று அவர் கூறினார்.
மதம் அவமதிக்கப்படும்போது அமைதியாக இருப்பது ஒரு தெரிவல்ல என்று அல்-சுல்தான் அப்துல்லா குறிப்பிட்டார்.
"அத்தகைய சூழ்நிலையில் அமைதியாக இருப்பது, ஆன்மாவின் பலவீனத்தையும், கண்ணியத்திற்கான பொறுப்புணர்வு மங்குவதையும் பிரதிபலிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.
இன்று, ஃபெல்டா ஜெங்கா 19-இல் உள்ள புதிய பள்ளிவாசலைத் திறந்து வைத்து, அதற்கு ‘மஸ்ஜித் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா’ என்று பெயர் சூட்டிய நிகழ்வில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
அதே வேளையில், இஸ்லாம் நீதியின் வரம்பிற்குள் உறுதியாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால் முஸ்லிம்கள் அவமானங்கள் நடப்பதை அனுமதிக்கக் கூடாது, அதே நேரத்தில் அமைதியைக் குலைக்கும் செயல்களால் பதிலடி கொடுக்கக் கூடாது என்றும் அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.
மற்ற மதத்தினரை அவர்கள் நம்பிக்கையை அமைதியாகப் பின்பற்ற அனுமதிக்கும் அதே வேளையில், முஸ்லிம்கள் தங்கள் மதத்தை உறுதியுடன் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
"பகாங் மாநிலத்தின் இஸ்லாமியத் தலைவராகவும் பாதுகாவலராகவும், இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு அவமதிப்பும் சட்டத்தின்படி சமரசமின்றி உறுதியாகக் கையாளப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். கருத்துச் சுதந்திரம் மதத்தை அவமதிப்பதற்கான ஒரு காரணம் அல்ல," என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
குர்ஆனைப் படிப்பது, அதன் பொருளைப் புரிந்துகொள்வது மற்றும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது போன்ற செயல்களின் மூலம் இஸ்லாமியர்கள் மீண்டும் குர்ஆனுக்குத் திரும்ப வேண்டும் என்றும் பகாங் சுல்தான் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் துங்கு அசிசா, பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா மற்றும் மாட்சிமை தங்கிய மன்னரின் பிற பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.
பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், ஃபெல்டா தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஷாபெரி சீக், மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது மற்றும் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த பிப்ரவரி 25 அன்று, மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழகத்தின் (UMPSA) மாணவர் ஒருவர், சமூக ஊடகங்களில் குர்ஆனை மிதித்து இஸ்லாத்தை அவமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது இன்று குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
-- பெர்னாமா
மாணவர் குர்ஆனை அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் மீது மாட்சிமை தங்கிய பகாங் சுல்தான் வருத்தம் தெரிவித்தார்.
4 மார்ச் 2026, 3:05 AM
உங்கள் கருத்து என்ன?




