இஸ்தான்புல், மார்ச் 2- தென் ஈரானின் மினாப் நகரில் அமைந்துள்ள பெண்கள் தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அந்தப் பள்ளி முழுமையாக அழிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், கல்வி நிலையத்தின் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல் என யுனெஸ்கோ சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற இந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 150 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் நம்பப்படும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில் பள்ளிகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் என்று எச்சரித்துள்ள அந்த அமைப்பு, கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு அவர்களின் கல்வி உரிமையையும் பறிப்பதாகக் கவலை தெரிவித்துள்ளது.
ஈரானின் எதிர்த்தாக்குதல்களையும் மற்றும் மத்திய கிழக்கின் பல பகுதிகளில் தொடரும் தீவிர இராணுவத் தாக்குதல்களையும் கண்டிப்பதில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் யுனெஸ்கோவும் தற்போது இணைந்துள்ளது.
இதனிடையே, எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும் ஐ.நா. அமைதித் தூதருமான மலாலா யூசுப்சாய், இந்தத் தாக்குதல் சம்பவம் தமக்கு மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.








