எம்பிபிஜே அமலாக்க நடவடிக்கைகளில் 1,200 வெளிநாட்டினர் கைது

27 பிப்ரவரி 2026, 8:51 AM
எம்பிபிஜே அமலாக்க நடவடிக்கைகளில் 1,200 வெளிநாட்டினர் கைது

பெட்டாலிங் ஜெயா, பிப். 27 – கடந்தாண்டு முழுவதும் மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரி வரை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளில் மொத்தம் 1,200 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேயர் டத்தோ முகமட் ஜோஹாரி சாமிங்கோன் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில் 1,138 கைது நடவடிக்கைகள் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன; மேலும் 62 கைது நடவடிக்கைகள் இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டவை,” என்றும் அவர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தலைமையகத்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான எம்பிபிஜேவின் இரண்டாவது முழுக்குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் எம்பிபிஜே மூன்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில், பெட்டாலிங் ஜெயா சுற்றுவட்டாரத்தில் உள்ள 236 வர்த்தக நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் நடவடிக்கைகள் சோதனை செய்யப்பட்டன.

“அந்த நடவடிக்கைகளில் ஏழு பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 29 அபராதங்கள் விதிக்கப்பட்டன. மேலும் 10 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன; இரண்டு வர்த்தக நிலையங்கள் மூட உத்தரவிடப்பட்டன,” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, வியாபாரிகள் மற்றும் முதலாளிகள் அனைத்து சட்டங்களையும் உரிம நிபந்தனைகளையும் கடைப்பிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

“பெட்டாலிங் ஜெயா மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மேலும் ஒழுங்குமுறை, நேர்மை மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த மாநகராட்சித் துறையை உறுதி செய்ய எம்பிபிஜே திறன் வாய்ந்த மற்றும் முழுமையான அமலாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.