ஷா ஆலாம், பிப் 26- ஜனவரி 30 முதல் மார்ச் 20 வரை நடைபெறவுள்ள 12-வது சிலாங்கூர் ரமலான் திருவிழா (FESTIRA 2026), சுமார் மூன்று மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு திருவிழாவில் 1,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்பதோடு, ஷா ஆலாம் பிகேஎன்எஸ் வளாகம், பங்கி பிகேஎன்எஸ் வளாகம், எஸ்ஏசிசி மால் மற்றும் புதிய இடமான அனேகா வாக் ஆகிய நான்கு முக்கிய இடங்களில் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
புதிய இடமான அனேகா வாக், குடும்பங்கள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் நவீன நகர்ப்புற சூழலில் நேரடி இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இத்திருவிழாவானது வெறும் விற்பனைத் தளமாக மட்டும் இல்லாமல், நோன்பு திறப்பிற்குப் பிறகு தராவீஹ் தொழுகை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இரவு வரை களைகட்டும் ஒரு சமூக நிகழ்வாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரமலான் மாதத்தின் இறுதி வாரத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஷா ஆலாம் பிகேஎன்எஸ் மற்றும் எஸ்ஏசிசி மாலில் விற்பனை நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பிகேஎன்எஸ் சூப்பர் செயலி மற்றும் சிலாங்கூர் ஜகாத் வாரியம் உள்ளிட்ட பல்வேறு வியூகப் பங்காளிகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தத் திருவிழா, சிறு வணிகர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில அரசின் இத்தகைய முயற்சிகள் ரமலான் மற்றும் நோன்புப் பெருநாள் காலங்களில் உள்ளூர் சமூகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, வணிகர்களுக்குப் பெரும் வருமானத்தையும் தேடித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.








