ரவாங் பெர்டானா ஆலயச் சிலைகள் இடமாற்றம்

25 பிப்ரவரி 2026, 8:31 AM
ரவாங் பெர்டானா ஆலயச் சிலைகள் இடமாற்றம்

கோலாலம்பூர், பிப் 25: ரவாங், தாமான் ரவாங் பெர்டானாவில் உள்ள ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய மேலாண்மை குழுவினரால் அங்கிருந்த சிலைகள் இடமாற்றம் செய்யும் பணி நேற்று இரவு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி சுமூகமாக நடைபெற்றது.

சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷசெலி கஹார் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், நேற்று இரவு 9.30 மணி முதல் இன்று அதிகாலை 4.12 மணி வரை இந்த இடமாற்றப் பணிகள் நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

 இந்த முழு செயல்முறையையும் மலேசிய அரச போலீஸ் படை கூர்ந்து கண்காணித்ததாகவும், இதில் எவ்வித தேவையற்ற சம்பவங்களும் நிகழவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆலய மேலாண்மை குழுவின் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த நான்கு சிலைகளையும் இடமாற்றம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.

இந்த இடமாற்றப் பணி முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நில உரிமையாளர் அந்த இடத்தில் தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்ட வழிமுறைகளை மதிக்க வேண்டும் என்றும், இன மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் சட்டத்தைத் கையில் எடுக்க வேண்டாம் என்றும் டத்தோ ஷசெலி எச்சரித்துள்ளார்.

ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை உள்ளூர் அதிகாரிகளாலும் நில உரிமையாளராலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 மேலும், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களைப் போலீஸார் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மதம், இனம் மற்றும் அரச நிறுவனம் (3R) தொடர்பான உணர்ச்சிகரமான கருத்துகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.