கேப் டவுன், பிப். 25 - நேற்று கேப் டவுன் அனைத்துலக விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அனைத்துலக விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதோடு, பயணிகள் மற்றும் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் ஏற்பட்ட இத்தீ விபத்து, தகவல் தொழில்நுட்ப (IT) வலையமைப்பின் சில பகுதிகள் உட்பட பல சேவைகளைப் பாதித்துள்ளது.
தீ பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பயணிகளும் ஊழியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
"விமான நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை ஏர்போர்ட்ஸ் கம்பெனி சவுத் ஆப்பிரிக்கா (ACSA) ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
"தீ அணைக்கப்பட்டது, மேலும் அனைத்துப் பயணிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை'," என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இச்சம்பவம் சில தகவல் தொழில்நுட்பச் சேவைகளைப் பாதித்ததாக ACSA கூறியது. "ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்துலக விமானப் புறப்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் உள்வரும் அனைத்துலக விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. தரையிறங்கிய அனைத்துலக விமானங்கள் பரிசீலனையில் உள்ளன."
உள்நாட்டுப் பயணிகள் தங்களின் விமானம் தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெற, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கைப்பேசி செயலிகளை நேரடியாகச் சரிபார்க்குமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
"தகவல்கள் அவ்வப்போது பகிரப்படும். பயணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று ACSA தெரிவித்தது.
-- பெர்னாமா








