கோலாலம்பூர், பிப் 24: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இன்று நடைபெற்ற முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சின் (மித்தி) நிர்வாகக் கூட்டத்தில், நாட்டிற்குள் வரும் முதலீடுகள் தொடர்பான பிரச்சனைகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இது குறித்து அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி கூறுகையில், பெறப்பட்ட அந்நிய முதலீடுகளின் செயல்பாடு மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான உள்நாட்டுத் தேவைகள் குறித்தும் இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அமைச்சின் கொள்கைகள் சீராகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, பிரதமரின் பரிசீலனைக்கும் முடிவிற்கும் தேவைப்படும் பல முக்கிய விஷயங்கள் உட்பட, அமைச்சின் உயர் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
"கொள்கைகளை மிகவும் திறம்பட செயல்படுத்தப் பிரதமரின் கவனத்திற்கு சில முக்கிய விஷயங்களை நாங்கள் முன்வைத்தோம்," என்று கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மித்தி துணை அமைச்சர் சிம் த்ஸே த்ஸின், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் மித்தி தலைமைச் செயலாளர் டத்தோ ஹைரில் யாஹிரி யாக்கோப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மித்தியின் கொள்கைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டிருந்தாலும், மேம்பாட்டிற்காகக் கருத்தில் கொள்ளக்கூடிய சில அம்சங்கள் இன்னும் உள்ளன என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.
பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் (ART) தொடர்பான பிரச்சினை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.





