கோலாலம்பூர், பிப் 23 – அமெரிக்காவின் பரஸ்பர வரிக் கொள்கை (Reciprocal Tariff) தொடர்பான விரிவான அறிக்கையை, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள கூட்டரசுப் பிரதேச மசூதியில் நடைபெற்ற 'ரக்கான் மஸ்ஜித் X ரக்கான் மூடா ரமலான்' தொடக்க விழா மற்றும் நோன்புத் துறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
"இது குறித்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி ஏற்கனவே சில விளக்கங்களை அளித்துள்ளார். இருப்பினும், இது குறித்த முழுமையான மற்றும் விரிவான அறிக்கை கிடைத்த பின்னரே அரசாங்கம் தனது இறுதி முடிவை அறிவிக்கும். வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்," என்று பிரதமர் மேலும் கூறினார்.
அமெரிக்காவின் இந்த புதிய வரிக் கொள்கை தொடர்பாக வாஷிங்டன் மற்றும் ஏனைய ஆசியான் நாடுகளுடன் மலேசிய அரசாங்கம் தற்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மாற்றங்களை மலேசிய அரசாங்கம் கூர்ந்து கவனித்து வருவதாக டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி தெரிவித்திருந்தார்.
மலேசியா கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், புத்ராஜெயா இதுவரை அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை (ratify) என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகளை அமல்படுத்துவதில் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து இறக்குமதி பொருட்களின் மீதும் 10 விழுக்காடு சீரான வரியை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் போது, மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி, மலேசியப் பொருட்களுக்கு 19 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. இருப்பினும், சில குறிப்பிட்ட தயாரிப்புகள் பூஜ்ஜிய வரிச் சலுகையைப் பெற்று வந்தன.
மலேசியாவின் பொருளாதார இறையாண்மை மற்றும் நன்மைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய, அந்த ஒப்பந்தத்தின் செலவினங்கள் மற்றும் நன்மைகள் குறித்த ஆய்வை MITI மேற்கொண்டு வருகிறது. அமைச்சரவையின் முடிவுக்குப் பிறகே மலேசியாவின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







