கோலாலம்பூர், பிப் 24 - மலேசிய கால்பந்து சங்கத்தைச் (FAM) சேர்ந்த ஏழு மரபுவழி (Naturalised) வீரர்களின் ஆவணங்கள் போலியானவை என்ற விவகாரத்தில், தற்போது அரச விசாரணை ஆணையத்தை (RCI) அமைக்கத் தேவையில்லை என உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சகம், இந்த விவகாரத்தை மலேசியக் கால்பந்து சங்கத்தின் சுதந்திரமான விசாரணைக் குழுவும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் (MACC) ஏற்கனவே ஆராய்ந்து வருவதால், தற்போதுள்ள சட்ட நடைமுறைகளே போதுமானவை எனக் குறிப்பிட்டது.
அதேவேளையில், கோத்த பாரு நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுதீன் ஹசான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சகம், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் 1950-ஆம் ஆண்டு விசாரணை ஆணையச் சட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் வியட்நாமுக்கு எதிரான ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றில் தகுதியற்ற வீரர்களை விளையாட வைத்ததாகக் கூறி, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) மலேசியாவிற்கு சுமார் 18 லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட காப்ரியல் பெலிப் அரோச்சா உள்ளிட்ட ஏழு வீரர்களும் தற்காலிகத் தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், கால்பந்து சங்கம் இது தொடர்பாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆவணங்களை மோசடி செய்தது யார் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், பிப்ரவரி 26-ஆம் தேதி CAS வழங்கவுள்ள இறுதித் தீர்ப்புக்காக மலேசிய கால்பந்து உலகம் காத்திருக்கிறது.








