சிரம்பான், பிப் 14 - பயணிகள் காத்திருக்கும் நேரம் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில், சிரம்பான் - கோலாலம்பூர் இடையேயான கேடிஎம் கொமிட்டர் சேவையின் பயண அட்டவணையை போக்குவரத்து அமைச்சு மறுஆய்வு செய்து மறுசீரமைக்கும்.
இந்தத் தணிப்பு நடவடிக்கைகளை விரிவாக ஆலோசித்து செயல்படுத்துவதற்காக சீனப் புத்தாண்டுக்குப் பிறகு ஒரு கலந்துரையாடல் நடத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
"தற்போது சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்கான பயணம் தடைபட்டுள்ளது எனக்குத் தெரியும். கொமிட்டர் பயண நேரம் ஒரு மணி 45 நிமிடங்கள் முதல் சில சமயங்களில் இரண்டு மணி நேரம் வரை ஆவதாக சிரம்பான் மக்கள் புகார் கூறுகின்றனர்," என்றார் அவர்.
"தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதே இந்தப் பயண தாமதத்திற்குக் காரணம். சில பகுதிகளில் ஒரே ஒரு தண்டவாளம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால், ரயில்களின் இயக்கம் பாதிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
சிரம்பான் ரயில் நிலையத்தில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
மேலும், சிரம்பான் ரயில் நிலையக் கட்டிடம் மற்றும் புதிய ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பயணிகளுக்குச் சில சிரமங்களை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலையை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் லோக் தெரிவித்தார்.
"புதிய நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைய இன்னும் ஓராண்டு ஆகும். அடுத்த ஆண்டுக்குள், இந்த நிலையம் சிரம்பான் பயணிகளுக்கு சிறந்த வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.
மற்றொரு நிலவரத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கு இரட்டைத் தண்டவாளத் திட்டம் கட்டம் 2 (KVDT2) திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், அதை விரைவுபடுத்துவதற்கான வழிகளை அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
"இது ஒரு சவாலான கட்டுமானப் பணியாகும். ஏனெனில், ஒரு தண்டவாளத்தில் பணிகள் நடைபெறும்போதே மற்றொரு தண்டவாளத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்க வேண்டும். பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.





