கோலாலம்பூர், பிப் 26: ஸ்ட்ராட்டா வீட்டுமனைப் பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் (PBT) அதிகார வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333)-ஐ திருத்தம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கூட்டு நிர்வாகக் குழு (JMB) மற்றும் நிர்வாகக் கழகம் (MC) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ கோரிக்கை அல்லது ஒத்துழைப்பு இருந்தால் தவிர, தனியார் ஸ்ட்ராட்டா பகுதிகளில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு இல்லை என்பதால் இந்தத் திருத்தத்திற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி துணை அமைச்சர் டத்தோ ஐமான் அதிரா சாபு தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு, சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), அரச மலேசியக் காவல்துறை, சுற்றுச்சூழல் துறை, மாநில அரசுகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றுடன் விரிவான கலந்துரையாடல் மூலம் இந்த மேம்பாடு இறுதி செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
"அனைத்து வகை உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அமலாக்க அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும், அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளை விரிவுபடுத்துவதற்கும் சட்டம் 333-இன் சில விதிகளில் திருத்தங்களைச் செய்ய நாங்கள் ஆலோசித்து வருகிறோம்."
"JMB மற்றும் MC ஆகியவை ஸ்ட்ராட்டா மேலாண்மைச் சட்டம் 2013 மற்றும் ஸ்ட்ராட்டா மேலாண்மை (மேலாண்மை மற்றும் பராமரிப்பு) ஒழுங்குமுறைகள் 2015-இன் கீழ் முழுமையாகச் செயல்படுகின்றன. வாகனப் பிரச்சினைகள் உட்பட, பொதுவான சொத்துப் பகுதிகளை நிர்வகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவர்களுக்கு முழு அதிகாரமும் சட்டப் பொறுப்பும் உள்ளது," என்று அவர் இன்று மக்களவையில் கேள்வி பதில் நேரத்தில் கூறினார்.
ஸ்ட்ராட்டா குடியிருப்புப் பகுதிகளில் கைவிடப்பட்ட வாகனங்கள் மீது உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து அஸ்லி யூசோப் (PH-ஷா ஆலம்) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
சட்டத் திருத்தப் பரிந்துரையைத் தவிர, நீண்ட நீதிமன்ற செயல்முறைகள் இன்றி வாகனங்களை அப்புறப்படுத்த உதவும் கூடுதல் கருவியாக சட்டம் 333-இன் பிரிவு 65-ஐப் பயன்படுத்துவதும் மற்ற நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் ஐமான் அதிரா கூறினார்.
"மேலும், மார்ச் 2025-இல் ஜேபிஜே உருவாக்கும் 'e-Dereg' அமைப்பு மூலம் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து பழைய வாகனங்களை அப்புறப்படுத்தலாம். இது வேகமான மற்றும் பயனர் நட்பு மாற்றாக அமையும்," என்றார் அவர்.
-- பெர்னாமா




