ஷா ஆலாம், பிப் 26- சிலாங்கூர் மாநில மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) மற்றும் சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (PKPS) இணைந்து நடத்தும் ‘ஜுவாலான் எசான் ரஹ்மா’ (JER) மலிவு விலை விற்பனைத் திட்டம் நாளை மாநிலத்தின் ஏழு முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்த விற்பனையில் ஒரு கோழி 10 ரிங்கிட், ஒரு பொட்டலம் இறைச்சி 10 ரிங்கிட், ஒரு அட்டை கிரேடு B முட்டைகள் 9 ரிங்கிட், ஒரு பொட்டலம் மீன் 6.50 ரிங்கிட், 2 கிலோ சமையல் எண்ணெய் 10 ரிங்கிட் மற்றும் 5 கிலோ அரிசி 12 ரிங்கிட் என மிகவும் மலிவான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களுடன் கோதுமை மாவு, சார்டின், பீஹூன், சோள பிஸ்கட், துணி துவைக்கும் சோப்பு மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகியவையும் சந்தை விலையை விடக் குறைவான விலையில் இந்த விற்பனைத் தளங்களில் கிடைக்கப்பெறும்.
இந்த விற்பனைத் திட்டமானது உலு சிலாங்கூரில் உள்ள கெடாங்சா பொது மண்டபம் மற்றும் உலு லங்காட்டில் உள்ள பண்டார் பாரு பாங்கி செக்சன் 7-இன் ஸ்ரீ செம்பாக்கா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.
கோல லங்காட்டின் தெலுக் பாங்லிமா காராங் ஜாலான் மங்கிஸ் பகுதி, கிள்ளான் கம்போங் தெலெக் பல்நோக்கு மண்டபம் மற்றும் கோம்பாக் பத்து ஆராங் தாமான் குரூபோங் ஜெயா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெட்டாலிங் கோத்தா டாமன்சாரா செக்சன் 11 குகுசான் டெடாப் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சிப்பாங் சுங்கை பீலெக் மெதடிஸ்ட் தொடக்கப்பள்ளிக்குச முன்புறம் உள்ள வியாபாரத் தளம் ஆகிய இடங்களிலும் இந்த மலிவு விலை விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காகச் சிலாங்கூர் விவசாய வளர்ச்சிக் கழகம் (PKPS) தர மேலாண்மை விருதைப் பெற்றதுடன், மிகப்பெரிய மானிய விற்பனையை நடத்தியதற்காக மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







