வருமானம் உயர்ந்தாலும் வாழ்க்கைச் செலவினம் மலேசியக் குடும்பங்களுக்குப் பெரும் சவாலே - அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா

25 பிப்ரவரி 2026, 8:38 AM
வருமானம் உயர்ந்தாலும் வாழ்க்கைச் செலவினம் மலேசியக் குடும்பங்களுக்குப் பெரும் சவாலே - அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா

ஷா ஆலம், பிப். 25: தேசிய அளவில் குடும்பங்களின் வருமானம் பணவீக்கத்தை விட வேகமாக அதிகரித்துள்ள போதிலும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினம் இன்னும் பல குடும்பங்களுக்கு, குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் பெரும் சவாலாகவே உள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமது நசீர் தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டுக்கான குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வறிக்கையின்படி (HIES), நாட்டின் சராசரி குடும்ப வருமானம் 1.8 விழுக்காடு பணவீக்கத்தை விஞ்சி, ஆண்டுக்கு 3.8 விழுக்காடு வளர்ச்சியுடன் 9,155 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் சராசரி குடும்ப வருமானம் 13,296 ரிங்கிட்டாகவும், கிள்ளான் மாவட்டத்தில் 10,912 ரிங்கிட்டாகவும் உயர்ந்துள்ள அதே வேளையில், இடைநிலை வருமானமும் தேசிய மற்றும் மாநில அளவில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், புள்ளிவிவரத் துறையின் தரவுகள் வறுமைக் கோட்டு வருமான வரம்பு 2,705 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதைக் காட்டுவதோடு, புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் போன்ற பகுதிகளுடன் சிலாங்கூரும் அதிக வாழ்க்கைச் செலவினங்களைக் கொண்ட மாநிலமாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகின்றன.

தேசிய சராசரி குடும்பச் செலவினம் 2024-இல் 5,566 ரிங்கிட்டாக உயர்ந்துள்ள நிலையில், செலவின வளர்ச்சியானது (3.9%) வருமான வளர்ச்சியை விட (3.8%) சற்று அதிகமாக இருப்பதால் மக்களின் வாங்கும் திறன் இன்னும் நெருக்கடியிலேயே இருப்பதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

மடாணி பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் ரொக்க உதவி, இலக்கு மானியங்கள் மற்றும் குறைந்தபட்ச சம்பள உயர்வு போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் மக்களின் வருமானத்தை உயர்த்தி வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.