அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பில் தீவிரம் – 850 அதிகாரிகள் நியமனம்

24 பிப்ரவரி 2026, 7:44 AM
அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்காணிப்பில் தீவிரம் – 850 அதிகாரிகள் நியமனம்

ஷா ஆலம், பிப் 24: அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நாடு முழுவதும் ஆய்வு செய்ய கூட்டாட்சி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக சபா மற்றும் சரவாக் மாநிலங்களும், கிராமப்புறப் பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், சந்தைகள் மற்றும் சில்லறை கடைகளில் 850 அதிகாரிகள் தினமும் விலைகளைக் கண்காணித்து வருகின்றனர் என அவர் இன்று மக்களவையில் கூறினார்.

இந்த ஆய்வு, அத்தியாவசியப் பொருட்கள் அனைவருக்கும் மலிவான விலையில் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று அவர் விளக்கினார்.

“சேகரிக்கப்பட்ட தரவுகள் வழக்கத்திற்கு மாறான விலை உயர்வுகளைக் கண்டறிந்து, அநியாய லாப நோக்க செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உதவுகின்றன,” என அவர் இன்று கோலாலம்பூர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில் தெரிவித்தார்.

கிழக்கு மலேசியாவில் விலை வேறுபாடுகளுக்கான முக்கிய காரணிகளில் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செலவுகள் அடங்கும் என ஃபுசியா கூறினார்.

அரசு, சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் 1,400-க்கும் மேற்பட்ட விநியோக மையங்களை அமைத்துள்ளது. இவை தொலைதூர பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் நுகர்வோரிடம் சென்றடைய உறுதி செய்கின்றன.

இந்த மையங்கள் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக மையங்களாக செயல்பட்டு, குறிப்பாகக் கிராமப்புறங்களில் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிலைநிறுத்தவும், தொடர்ச்சியான கிடைப்பை உறுதி செய்யவும் உதவுகின்றன.

“சபாவில் 608 விநியோக மையங்களும், சரவாகில் 820 மையங்களும் செயல்படுகின்றன. இவை விலைகளை கட்டுப்படுத்தவும், பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவுகின்றன,” என அவர் கூறினார்.

அரிசி, கோழி இறைச்சி முதல் காய்கறிகள் வரை முழு விநியோகச் சங்கிலியையும் அரசு கண்காணித்து, நியாயமான விலையை பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.