கோலாலம்பூர், பிப் 24 - நாட்டில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பிரதமராகப் பணியாற்றியவர்கள் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், பிரதமரின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்தும் புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சைட் இது குறித்து விளக்குகையில், தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர்களான முகிடின் யாசின் மற்றும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர் இக்கட்டுப்பாட்டிற்குள் வரமாட்டார்கள் என்பதால் அவர்கள் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், மலேசியாவில் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் மொத்தம் 24 ஆண்டுகள் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய துன் டாக்டர் மகாதீர் முகமது போன்றவர்கள், இந்த புதிய திருத்தச் சட்டத்தின் கீழ் மீண்டும் பிரதமராகும் தகுதியை இழக்க நேரிடும்.
முன்னதாக, பிரதமரின் பதவிக்காலத்தை இரண்டு தவணைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தும் மசோதா மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் பொதுத் வழக்கறிஞரின் அதிகாரங்களைப் பிரிக்கும் மசோதா ஆகியவற்றை அசலினா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த இரு முக்கிய மசோதாக்களின் இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இப்பதவிக் காலக் கட்டுப்பாடு தமக்கே முதலில் பொருந்தும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.




