கூச்சிங் பிப்ர.18- அக்டோபர் 2021 முதல் கடந்த ஆண்டு டிசம்பர் வரை, உள்ளூர் சமூக ஆதரவு மையம் (PSSS) மூலம் பாதிக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்த 156,033 வழக்குகள் கவனிக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்தார்.
மனநல ஆதரவு, ஆலோசனை மற்றும் களங்கம் இல்லாத ஆரம்பக்கட்ட தலையீடுகளை வழங்குவதற்கான இத்தகைய சேவைகளின் தேவை தற்போது மிக அவசரமாக உள்ளது என்று அவர் கூறினார்.
"மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு PSSS ஒரு தகவல் தளமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இதனை ஊக்குவித்து வருகிறோம்."
"இன்றைய சமூகத்தில் இது மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. எனவே, இது போன்ற பிரச்சினைகளால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை," என்று பெட்ரா ஜெயாவில் நடைபெற்ற இஹ்யா ரமலான் 2026/1447H நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சமூகத்தில் ஏற்படும் சிந்தனைக் குழப்பங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அழுத்தங்களைக் கையாள்வதில் அண்டை வீட்டார் மற்றும் உள்ளூர் சமூகத்தினரின் அக்கறை மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ஒரு சமூகமாக, நாம் ஒருங்கிணைந்து வாழ்கிறோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு நாமும் பொறுப்பு. நமது அண்டை வீட்டாரிடம் காணப்படும் அறிகுறிகளை நம்மால் கவனிக்க முடியும்."
"உள்ளூர் மக்கள் அறிவுரை வழங்குவதன் மூலமோ அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலமோ முக்கியப் பங்காற்ற முடியும்," என்றார் அவர்.
பகாங், குவாந்தானில் உள்ள தாமான் செராட்டிங் டாமாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
32 வயதான கணவர், கத்தி போன்ற கூரிய ஆயுதத்தால் தனது மனைவி, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளைக் காயப்படுத்திய பின்னர், தன்னையும் காயப்படுத்திக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுவதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹ்யா ஓத்மான் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஜனவரி முதல் இன்று வரை, நாடு முழுவதும் தாய்மார்கள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட குறைந்தது ஏழு வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும், இந்த ஆண்டு கூச்சிங்கில் PSSS-இன் கீழ் மூன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் நான்சி கூறினார்.
-- பெர்னாமா


