சிரம்பான், பிப். 17: இங்கு, சுங்கை காடுட், டத்தோ அப்துல் ரசாக் பள்ளிக்கு அருகே அவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததாக நம்பப்படும் சம்பவத்தில், ஓர் ஆடவர் மரணமடைந்தார்.
25 வயதான அந்த நபர், இன்று அதிகாலை முதல் வீட்டிற்குத் திரும்பாததால், அவரது குடும்பத்தினரால் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஏசிபி அசார் அப்துல் ரஹீம் கூறினார்.
“அதன்பின்னர், அவரது குடும்பத்தினர் அவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா யாரிஸ் காரில் இருந்த ஜிபிஎஸ் (GPS) சாதனம் மூலம் அவரது கடைசி இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சித்துள்ளனர்.
“அந்த ஆய்வில், காரின் கடைசி இருப்பிடம் அந்த ஆற்றுக்கு அருகிலுள்ள பகுதியில் இருப்பது தெரியவந்ததையடுத்து, தீயணைப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்,” என்று அவர் இன்று இங்கு கூறினார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (APJ) பிரிவு 41(1)-இன் கீழ் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், சிரம்பான் மண்டலம் 1-இன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மூத்த செயல்பாட்டுக் கமாண்டர், பிபிஜிபி முகமது ஃபட்லி ஷம்சுதீன், இந்தச் சம்பவம் குறித்த தகவல் தங்களுக்கு மாலை 5 மணியளவில் கிடைத்ததாகக் கூறினார்.
“மாலை 6.15 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக ஆறு ஆழமாகவும், நீர்வரத்து அதிகமாகவும் இருந்ததால் நாங்கள் சில சிரமங்களை எதிர்கொண்டோம்,” என்றார். 13 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட இந்த நடவடிக்கை மாலை 6.40 மணிக்கு முடிவடைந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
- பெர்னாமா


