சிபு, பிப். 15 – இங்குள்ள, ஜாலான் லானாங்கிலுள்ள ஒரு வங்கியில் இன்று கண்ணாடி கதவு சுட்டு உடைக்கப்பட்டதாக நம்பப்படும் சம்பவம் தொடர்பில், அதன் நோக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி, சம்பவ இடத்தில் மேற்கொண்ட சோதனையில், ஒரு தோட்டாவின் உறையும், பயன்படுத்தப்படாத ஒரு தோட்டாவும் கண்டெடுக்கப்பட்டதாக ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இவை அச்சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
"இச்சம்பவம் குறித்து ஒரு ஆடவரிடமிருந்து புகார் பெறப்பட்டதை சிபு மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
“சாட்சியின் வாக்குமூலத்தின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவன், கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒரு முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளான்,” என்று அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை அல்லது உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என்றும், 1960ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 39ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
விசாரணையைப் பாதிக்கக்கூடிய எந்தவொரு யூகங்களையும் செய்ய வேண்டாம் என பொதுமக்களை சுல்கிப்லி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
-- பெர்னாமா


