'ஓப்ஸ் கேஸ் தாரிங் பிராவோ 3' நடவடிக்கையில் சட்டவிரோத உரத் தொழிற்சாலை மீது அதிரடி சோதனை, 47 டன் ரசாயன உரம் பறிமுதல்

17 பிப்ரவரி 2026, 7:09 AM
'ஓப்ஸ் கேஸ் தாரிங் பிராவோ 3' நடவடிக்கையில்  சட்டவிரோத உரத் தொழிற்சாலை மீது  அதிரடி சோதனை,  47 டன் ரசாயன உரம் பறிமுதல்

தாசெக் குளுகோர், பிப். 17: சட்டவிரோத உரத் தொழிற்சாலை மீது பொதுப்பணி படை (பிஜிஏ) நடத்திய அதிரடி சோதனையில் 47 டன் ரசாயன உரம் பறிமுதல் செய்யப்பட்டது. 'ஓப்ஸ் கேஸ் தாரிங் பிராவோ 3' என்ற நடவடிக்கையின் கீழ், இங்குள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள், ஒரு லாரி மற்றும் 47,000 கிலோகிராம் உரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 771,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப் பணிப் படையின் வடக்கு பிரிகேட் தளபதி, எஸ்ஏசி பல்வீர் சிங் கூறுகையில், கைது செய்யப்பட்ட மியன்மார் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த வெளிநாட்டினர் உட்பட ஐவரும், உரிய அதிகாரிகளின் அனுமதியின்றி சட்டவிரோதமாக ரசாயன மற்றும் கலப்பு உரங்களைத் தயாரித்ததாக நம்பப்படுகிறது என்றார்.

"தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பதப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த பெரிய அளவிலான உரமும், அதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

"ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்தச் சட்டவிரோத தொழிற்சாலை கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்கி வருவது தெரிய வந்துள்ளது," என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக பெறப்பட்ட மானிய உரங்களை மற்ற பொருட்களுடன் கலந்து மறுசுழற்சி செய்து, அதன் அளவை அதிகரிப்பதே இவர்களின் செயல்பாட்டு முறையாகும். பின்னர், அவை புதிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விவசாயப் பயன்பாட்டிற்காக சந்தையில் விற்கப் படுகின்றன என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 34 முதல் 51 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர்வாசிகள் மற்றும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்தோனீசியா மற்றும் மியன்மாரைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர் என பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு பினாங்கு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் (KPDN) ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும், தொழிற்சாலை உரிமையாளர் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961-இன் பிரிவு 21(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார் என்றும் அவர் கூறினார்.

"கைது செய்யப்பட்டவர்களில் மூவரின் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. அவர்கள் அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952-இன் பிரிவு 15(1)-இன் கீழ் விசாரிக்கப் படுகின்றனர். சரியான அடையாள ஆவணங்கள் இல்லாததால், இரண்டு வெளிநாட்டு சந்தேக நபர்களும் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்," என்றார்.

அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியதற்காக தொழிற்சாலை உரிமையாளர் குடிநுழைவுச் சட்டம் 1959/63-இன் பிரிவு 55B-இன் கீழும் விசாரிக்கப் படுகிறார். மேலும், முறையான உரிமம் இல்லாமல் வணிகம் செய்ததற்கான செபராங் பிறை மாநகர் மன்றத்தால் (MBSP) அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை வடக்கு பிரிகேட் பிஜிஏ-வின் புலனாய்வுப் பிரிவு, வடக்கு செபராங் பிறை மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD), பினாங்கு KPDN மற்றும் MBSP ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.