குடியிருப்பாளர்களுக்கு ஈ தொல்லை- கோழிப் பண்ணையாளர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் பண்ணைகளைத் தற்காலிகமாக மூட நடவடிக்கையை எடுக்கப்படும்.

15 பிப்ரவரி 2026, 3:14 AM
குடியிருப்பாளர்களுக்கு ஈ  தொல்லை-  கோழிப் பண்ணையாளர்கள்   சுகாதார  நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால்  பண்ணைகளைத் தற்காலிகமாக மூட நடவடிக்கையை எடுக்கப்படும்.

ஷா ஆலாம், பிப் 14: கம்போங் லாடாங் பத்துவில் உள்ள கோழிப் பண்ணை உரிமையாளர்கள், சுகாதார மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால், குடியிருப்பாளர்களுக்கு ஈக்களின் தொல்லையை ஏற்படுத்தும் பட்சத்தில், அவர்களது பண்ணைகள் தற்காலிகமாக மூடப்படும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா கூறுகையில், ஈக்கள் தொல்லை குறித்த புகார்கள் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, 12 கோழிப் பண்ணை உரிமையாளர்களுடன் நேற்று ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது.

அவரது கருத்துப்படி, கோலா லங்காட் நகராண்மைக் கழகமும் (MPKL) இந்த கலந்துரையாடலில் சிறந்த தீர்வைக் காணும் நோக்கில் ஈடுபடுத்தப்பட்டது.

"விவாதத்தின் முடிவில், ஒன்று அல்லது இரண்டு பண்ணைகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட மேலாண்மை நடைமுறைகளைக் கடைப் பிடிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. அவையே ஈக்கள் தொல்லைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்."

"ஒவ்வொரு முறையும் பண்ணையிலிருந்து கோழிகள் வெளியேற்றப்படும்போது புகை மூட்டம் தெளிப்பது, கோழிக் கூடுகளை இறுக்கமாக மூடுவது, மற்றும் கோழி எச்சங்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு முன்பு சில நாட்கள் உலர வைக்கப்படுவதை உறுதி செய்தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இந்த வழிமுறைகள் சரியாகப் பின்பற்றப் பட்டால், ஈக்களின் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த முடியும்," என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், சில பண்ணை உரிமையாளர்கள் இலாபம் ஈட்டும் நோக்கில், இன்னும் ஈரமான நிலையில் உள்ள கோழி எச்சங்களை உரமாக விற்பனை செய்வதால் இந்த பிரச்சனைக்கு பங்களிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

கஞ்சோங் தெங்கா மற்றும் கம்போங் எண்டாவைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் இதே போன்ற புகார்கள் பெறப்பட்டுள்ளதாக போர்ஹான் தெரிவித்தார். இங்குள்ள பண்ணைகளிலும் கோழி வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

அமலாக்க நடவடிக்கைகள் குறித்து கருத்துரைத்த அவர், கடுமையான எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாகவும், கால்நடைத் துறை, கோலா லங்காட் நகராண்மைக்கழகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளின் ஈடுபாட்டுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

"இன்னும் ஒத்துழைக்கத் தவறினால், பண்ணை-களைத் தற்காலிகமாக மூடுவது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது, பண்ணை உரிமையாளர்கள் வழக்கமாக அதிக கவனம் செலுத்தி விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்," என்றார் அவர்.

மேலும், தொழிலாளர் செலவுகளைச் சேமிக்கும் முயற்சி, தரம் குறைந்த பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் இந்த மேலாண்மை தோல்வி ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக பன்றி வளர்ப்பு விவகாரங்களில் கழிவுகளை ஆறுகளிலோ அல்லது கடலிலோ கொட்டியது போன்ற மாசுபாடு பிரச்சினைகள் மீண்டும் நிகழக்கூடாது என்று அவர் நினைவூட்டினார்.

"கிருமிநாசினி கலந்த நீர் கட்டுப்பாடில்லாமல் வெளியேற்றப்படுவதாகவும், அதுவும் ஈக்கள் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் எனக்குப் புகார்கள் வந்துள்ளன," என்றார் அவர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கோழி வளர்ப்பு நடவடிக்கைகளால் கம்போங் லாடாங் பத்து குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கை ஈக்களின் தொல்லையால் பாதிக்கப் பட்டுள்ளதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் ஈ ஒட்டும் பொறிகளை வாங்குதல், கொசுவலைகளைப் பொருத்துதல், பண்ணை வளாகங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துதல் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.