வரவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மலாக்கா கால்நடைகள் சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்யவுள்ளது.

14 பிப்ரவரி 2026, 12:06 PM
வரவிருக்கும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மலாக்கா கால்நடைகள் சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்யவுள்ளது.

ஜாசின், பிப் 14 – மாநிலத்தில் மாடுகள் மற்றும் எருமைகளுக்கு கியூஆர் குறியீடு (QR) முறை செயல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து, சுற்றித் திரியும் கால்நடைகள் மீதான அமலாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், மலாக்கா மாநில அரசு வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில் கால்நடை சட்டம் தொடர்பான திருத்தங்களைத் தாக்கல் செய்யவுள்ளது.

இந்த நடவடிக்கை, பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை நிர்வகிப்பதில் அதிகப் பொறுப்புடன் இருப்பதை உறுதி செய்வதோடு, சாலை விபத்துகள் மற்றும் பயிர் சேதங்கள் ஏற்படும் அபாயங்களைத் தவிர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மாநில ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மல் சாலே கூறினார்.

"இந்த மே மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த சட்டத் திருத்தம், குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனைகள் மற்றும் அபராதங்களை விரிவாகக் குறிப்பிடும்.

"சுற்றித்திரிந்து சேதத்தை ஏற்படுத்தும் கால்நடைகள், பயிர் சேதங்களை ஏற்படுத்துவது, சிறிய அல்லது கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் விபத்துகள் மற்றும் மரணம் விளைவிக்கும் சம்பவங்கள் என ஒவ்வொரு குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள் மாறுபடும்," என அவர் இன்று இங்கு மெர்லிமாவ், டத்தாரான் ஓராங் கம்போங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, அவர் மாநில அளவிலான அக்ரோ மடாணி விற்பனைக் கானிவல் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டரசு விவசாய சந்தைப் படுத்தல் ஆணையத்தின் (ஃபாமா) தலைமை இயக்குநர் அப்துல் ரஷீத் பஹ்ரியும் கலந்து கொண்டார்.

மேலும் கருத்துரைத்த டாக்டர் முஹமட் அக்மல், இந்த நடவடிக்கை தண்டிக்கும் நோக்கமல்ல, மாறாக கால்நடைகள் உரிமையாளர்களின் பொறுப்பு என்பதை அவர்களுக்கு நினைவூட்ட, கல்வி புகட்டவுமே கொண்டுவரப்படுகிறது என்றார். பொதுப் பாதுகாப்பைப் பாதிக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுப்பதே இதன் முக்கியக் குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாடுகள் மற்றும் எருமைகளுக்கும் கியூஆர் குறியீட்டுப் பட்டை பொருத்துவதை மாநில அரசு கட்டாயமாக்கும் என்று அவர் கூறினார்.

"முதல் ஆறு மாதங்களுக்கு, இந்தப் பட்டைகளைப் பொருத்தும் செலவை மாநில அரசே முழுமையாக ஏற்கும். இந்தக் கருணைக் காலத்தில், அனைத்துப் பண்ணையாளர்களும் கால்நடை மருத்துவ சேவைகள் துறையில் பதிவு செய்து, இந்தப் பட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குறியிடும் செயல்முறை படிப்படியாக மேற்கொள்ளப்படும்."

"ஆறு மாதங்களுக்குப் பிறகு, குறியிடும் செலவைப் பண்ணையாளர்களே ஏற்க வேண்டும். அந்த காலகட்டத்திற்குப் பிறகு பட்டை பொருத்தப் படாத மாடுகள் அல்லது எருமைகள் பதிவு செய்யப்படாதவையாகக் கருதப்பட்டு, திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அவற்றைப் பிடிக்கலாம்," என்றார் அவர்.

பிடிபட்ட கால்நடைகள், திருத்தப்பட்ட சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.