பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சுகாதார அமைச்சு முழுமையான சீர்திருத்தத்தை அமல்படுத்துகிறது - அமைச்சர்

14 பிப்ரவரி 2026, 9:51 AM
பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சுகாதார அமைச்சு முழுமையான சீர்திருத்தத்தை அமல்படுத்துகிறது - அமைச்சர்

புத்ராஜெயா, பிப். 14 (பெர்னாமா) -- பொது சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் தொடர்ந்து நிலவும் மனிதவளப் பற்றாக்குறையை சுகாதார அமைச்சு (KKM) ஏற்றுக்கொண்டுள்ளதோடு, நாடு தழுவிய அளவில் பணியாளர் சவால்களைச் சமாளிக்க முழுமையான கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்த உறுதியளித்துள்ளது.

பணியாளர் பற்றாக்குறை குறித்து பொது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பிரச்சினை பற்றி அமைச்சு அறிந்திருப்பதாகவும், நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு முறையை வலுப்படுத்த அமைச்சு கொண்டுள்ள உறுதியை மீண்டும் நிலை நிறுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

தற்போது பொது சுகாதார சேவைகளைப் பாதிக்கும் இரண்டு முக்கிய கட்டமைப்புச் சவால்களை சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளதாக அவர் கூறினார். அவை, பணியாளர் விநியோகத்தில் பற்றாக்குறை மற்றும் சமநிலையற்ற விநியோகம் ஆகும்.

"இந்தப் பிரச்சினையைத் திறம்படக் கையாள, சுகாதார அமைச்சு தற்காலிகத் தீர்வுகளைத் தாண்டி, விரிவான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கி நகர்கிறது," என்று அவர் இன்று தனது 'X' சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

கோடிட்டுக் காட்டப்பட்ட சீர்திருத்தங்களில், மருத்துவ அதிகாரிகளுக்கான (MO) ஒப்பந்த முறையை படிப்படியாக நீக்குதல், பணியாளர்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்ய கட்டாய இடமாற்றம், சேவையில் விரைவாக நுழைவதை உறுதிசெய்ய பட்டதாரி மருத்துவ அதிகாரிகளின் (HO) பயிற்சியை நெறிப்படுத்துதல், மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலனை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது குறிப்பிட்டார்.

"இந்தப் பிரச்சினையில் ஒரு முதிர்ச்சியான விவாதத்தை நான் வரவேற்கிறேன். நமது பொது சுகாதார பராமரிப்பு முறையை மேம்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை," என்றார் அவர்.

சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், இந்தப் பணியாளர் பற்றாக்குறை சூழல், நீண்டகாலமாக இருந்துவரும் மரபுவழி கட்டமைப்புச் சவால்கள் மற்றும் தேசிய அளவில் பணியாளர்களின் சமனற்ற விநியோகத்தின் வெளிப்பாடாகும் என்று விளக்கியிருந்தது.

வேலை சந்தையில் நுழையும் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு உன்னிப்பாகக் கண்காணிக்கப் படுகிறது. இந்த சரிவு, பொது சுகாதார வசதிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் விகிதத்தில் ஒரு 'சங்கிலித் தொடர் எதிர்வினையை' ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின்படி, நாடு முழுவதும் உள்ள 48 பட்டதாரி பயிற்சி மருத்துவமனைகளில் (HLS) பணியிடங்களை நிரப்பும் விகிதம் பிப்ரவரி 2026 நிலவரப்படி 53 விழுக்காடாக உள்ளது. அதாவது, 12,198 இடங்களுக்கு 6,500 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டின் முதல் நியமனத்தில், விண்ணப்பித்த 579 பட்டதாரிகள் அனைவரும் நியமிக்கப்பட்ட போதிலும், அந்த எண்ணிக்கை தேசிய அளவிலான காலி இடங்களில் சுமார் 10 விழுக்காட்டை மட்டுமே நிரப்புகிறது என்பதால், இந்தச் சவால் மேலும் தீவிரமடைகிறது.

பட்டதாரி மருத்துவ அதிகாரிகள் (PPS) பணியிடங்கள் நிரப்பப்படுவதில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, போதுமான பணியாளர்களை வழங்குவதற்கான அமைப்பின் திறனை நேரடியாகப் பாதித்துள்ளது.

இருப்பினும், 2025 ஜூலை 25 தேதியிட்ட சுகாதார தலைமை இயக்குநரின் சுற்றறிக்கைக்கு இணங்க, பட்டதாரி மருத்துவ அதிகாரிகளின் பயிற்சியின் அடிப்படைக் கொள்கை, கட்டமைக்கப்பட்ட பயிற்சியின் மூலம் மருத்துவத் திறன்களை முழுமையடையச் செய்வதே ஆகும் என்பதை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியது.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.