ஷா ஆலம், பிப் 12: நாட்டின் செமிகண்டக்டர் மற்றும் உயர் தொழில்நுட்பப் பொறியியல் துறையில் நிலவும் நிபுணத்துவத் திறமையாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சிலாங்கூர் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூன் மாதம் 60 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவின் புகழ்பெற்ற சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்திற்கு (IIT Madras) அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
அங்கு அவர்கள் 'ஆர்ஐஎஸ்சி-வி' (RISC-V) எனப்படும் மேம்பட்ட திறந்த சிப் கட்டமைப்பு குறித்து தீவிரப் பயிற்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் இதுகுறித்துக் கூறுகையில், ஒரு மாதக் கால இந்தியப் பயிற்சிக்குப் பிறகு, இந்த மாணவர்கள் மலேசியாவிலுள்ள முன்னணி நிறுவனங்களில் மூன்று மாதக் கால தொழில்முறைப் பயிற்சியைப் பெறுவார்கள் என்றார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10,000 ரிங்கிட் கல்வி உதவித்தொகை நிலைப் வாரியாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மாநில அரசின் தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு மூலோபாய முதலீடு என அவர் வர்ணித்தார்.
இந்த உயர்தரப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் 100 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவின் செமிகண்டக்டர் தொழில் மதிப்புச் சங்கிலியை (Value Chain) உலகத் தரத்திற்கு வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டமானது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கூட்டு முயற்சியாகச் செயல்படுத்தப்படுவதுடன், இரு தரப்பினரும் இதற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்குகின்றனர்.
மலேசியாவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கோ அல்லது வாய்ப்புகளுக்கோ எவ்விதக் குறையும் இல்லை; ஆனால் அனுபவம் வாய்ந்த திறமையாளர்களே தற்போதையத் தேவையாக உள்ளனர்.
சில நிறுவனங்கள் திறமையான பட்டதாரிகளுக்கு 8,000 ரிங்கிட் வரை தொடக்கச் சம்பளம் வழங்கத் தயாராக உள்ளன. தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, ஆண்டுக்கு 600 பொறியியலாளர்கள் வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3,000 பேருக்குப் பயிற்சி அளிப்பதே மாநில அரசின் இலக்காகும்.


