கோலாலம்பூர், பிப் 8: சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மின்னியல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்களை (CSAM) அனுப்புவது உட்பட இணையக் குற்றங்கள் மீதான அமலாக்கத்தை அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகையில், தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தில் செய்யப்பட்ட சமீபத்திய திருத்தம், CSAM உள்ளடக்கங்களை அனுப்புவதில் ஈடுபடும் நபர்களை அதிகாரிகள் கைது செய்ய அனுமதிக்கிறது என்றார்.
"சட்டவிரோத உள்ளடக்கங்களை அனுப்புவதற்கு வலையமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவது, குறிப்பாக CSAM, ஒரு குற்றமாகும், இதில் ஈடுபடுவோர் தடுத்து வைக்கப்படலாம்."
"முன்னதாக, தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழ் கைது செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால், சமீபத்திய திருத்தம் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரத்தை வழங்குகிறது," என்று தித்திவாங்சா பூங்காவில் இன்று 2026ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்பு தினத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கூறினார்.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஃபஹ்மி கூறினார்.
இணைய மோசடிகளின் தந்திரங்கள் மற்றும் மின்னியல் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து சமூகத்திற்குத் தகவல் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 150 'வீர பாதுகாப்பு' (Wira Keselamatan) வீரர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
பொறுப்பற்ற தரப்பினரால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறாகப் பயன்படுத்தப்படுவது உட்பட, இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இணையக் குற்றங்கள் மீதான நடவடிக்கைகளை அரசாங்கம் கடுமையாக்குகிறது; சிறுவர் பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படலாம்
8 பிப்ரவரி 2026, 1:16 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




