சிலாங்கூர் நாட்டின் பொருளியல் நாடித்துடிப்பு, மக்கள் ஒற்றுமையைக் காக்க மந்திரி புசார் வலியுறுத்து

8 பிப்ரவரி 2026, 3:06 AM
சிலாங்கூர் நாட்டின் பொருளியல் நாடித்துடிப்பு, மக்கள் ஒற்றுமையைக் காக்க மந்திரி புசார் வலியுறுத்து

சுபாங் ஜெயா, பிப் 8: நாட்டின் பொருளியலுக்கு சிலாங்கூர் கிட்டத்தட்ட கால் பங்களிப்பை வழங்குவதாகவும், அதன் பலம் மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைச் சார்ந்துள்ளது என்றும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மாநிலத்தின் தற்போதைய சிறப்பைத் தொடரவும், சிலாங்கூர் நாட்டின் பொருளியல் மையமாகத் தொடர்ந்து திகழ்வதை உறுதிசெய்யவும் சமூகத்தின் நல்லிணக்கமும் நிலைத்தன்மையும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

எந்தவொரு கருத்து வேறுபாடும் பிளவுக்குக் காரணமாக அமையக்கூடாது என்றும், மாறாக பொது நலனுக்காக முதிர்ச்சியுடனும் இணக்கத்துடனும் விவாதித்துத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமிருடின் கூறினார்.

"கருத்து வேறுபாடுகள் இருந்தால், நாம் கலந்தாலோசிப்போம். பிரச்சனைகள் ஏற்பட்டால், அதை இணக்கமாகத் தீர்க்க முயற்சிப்போம். நாம் ஒரு முடிவு
எடுத்தால், அதை உடனடியாக முடிப்போம்," என்றார்.

"ஏனென்றால், நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். சிலாங்கூர் மாநிலம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் பொருளியலுக்கு கால் பங்கிற்கும் மேல் பங்களிப்பதால், சிலாங்கூரின் வலிமையும் நிலைத்தன்மையும் இல்லாமல், நாட்டின் பொருளியலும் பாதிக்கப்படும். நாம் தோல்வியுற்றால், மலேசியாவும் மோசமான தாக்கத்தையும் விளைவுகளையும் சந்திக்கும்," என்று அவர் கூறினார்.

நேற்றிரவு, பூச்சோங், தாமான் வாவாசான் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதே நிகழ்வில், குறுகிய அரசியல் நலன்களுக்காக இன உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கும் பொறுப்பற்ற தரப்பினரின் சூழ்ச்சிகளில் எளிதில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அமிருடின் மக்களை எச்சரித்தார்.

"அவர்களுக்கு, அவர்களின் மனநிறைவு மட்டுமே முக்கியம் அல்லது சிலர் உடனடியாக அரசியல் வெற்றியை அடைய முயற்சிக்கின்றனர். இது ஒரு 'zero-sum game' அல்ல.

"இந்த மாநிலம் நமது மற்றும் நாட்டின் எதிர்காலமாகும். ஒரு மந்திரி புசாராக, சிலாங்கூரில் உள்ள மலாய், சீன மற்றும் இந்திய சமூகத்தினரைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு முதல், மாநில அரசு அனைத்து இனத்தவருக்கும் மதத்தினருக்கும் நியாயமான சேவையும் அணுகுமுறையும் கிடைப்பதை உறுதி செய்து வருவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப அவரவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

"இந்த மாநிலத்தில் உள்ள பல்லின சமூகத்தின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசு எப்போதும் உணர்ந்து செயல்படுகிறது.

"இந்த உணர்வுதான் சிலாங்கூரை நம் நாட்டின் பொருளியல் வெற்றியாளராக(champion) ஆக்குவதற்கு உந்துதலாக அமைந்துள்ளது," என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.