சுற்றுச்சூழல் தூய்மையில் எலி ஒழிப்பு- 3 ரிங்கிட் வெகுமதி அம்பாங் ஜெயா வழங்குகிறது

8 பிப்ரவரி 2026, 2:49 AM
சுற்றுச்சூழல் தூய்மையில்  எலி ஒழிப்பு- 3 ரிங்கிட் வெகுமதி  அம்பாங் ஜெயா  வழங்குகிறது

அம்பாங் ஜெயா, பிப். 7: சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணுவதில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக, பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் 3 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும் என அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் (MPAJ) அறிவித்துள்ளது.

இந்த பிரச்சாரம், குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விலங்குகளால் பரவும் நோய்களின் அபாயத்தைக் கட்டுப்படுத்த உள்ளூராட்சி மன்றத்திற்கு உதவும் வகையில் செயல்படுத்தப்படுவதாக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் துணைத் தலைவர், ஹஸ்ரோல்நிஜாம் ஷாரி கூறினார்.

"எலிகளால் ஏற்படும் பிரச்சனைகளை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் ஒரு முற்போக்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். இன்று, பண்டான் ஜெயா சந்தை போன்ற பொது மக்கள் கூடும் முக்கியப் பகுதியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்," என்று இன்று காலை 'எலி ஒழிப்பு பிரச்சாரம் 2026: நகரின் சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பேணுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி'யைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் கூறினார்.

அம்பாங்கில் எலிகளின் நடமாட்டம் இன்னும் கட்டுக்குள் இருந்தாலும், சமூகத்தின் நலன் மற்றும் ஆரோக்கியம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய ஆரம்பக்கட்ட தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சாரம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், தூய்மையான, பாதுகாப்பான மற்றும் நோய் அபாயமற்ற சூழலை உருவாக்க குடியிருப்பாளர்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டலம் 16-இன் கவுன்சிலர் கோ எங் கீ, அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நகர்ப்புற சேவைகள் மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் கைரிலாசார் இஸ்மாயில் மற்றும் இதர மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் பூச்சியியல் நிபுணரின் சுகாதார விளக்கவுரை, கண்காட்சி மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட கோத்தோங்-ரோயோங் நடவடிக்கை ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.