சிரம்பான், பிப் 4- சிரம்பானில் உள்ள பிரபல நாசி கண்டார் உணவகம் ஒன்று, வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவுகளில் மீதமுள்ளவற்றைத் துவைத்து, அடுத்த நாள் மீண்டும் பயன்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப் பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ ஒன்றில், அந்த உணவக ஊழியர் ஒருவர் மீந்துபோன கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் டோஃபு (tofu) துண்டுகளைத் தண்ணீரில் கழுவி, மீண்டும் தட்டுகளில் அடுக்கி வைப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அந்த ஊழியரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த உணவுகள் அடுத்த நாள் விற்பனைக்காகத் தயார் செய்யப்படுவதாக அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தை அடுத்து, நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை நேற்று அந்த உணவகத்திற்குச் சென்று சோதனை நடத்தியது.
உணவகத்தின் சுகாதாரமற்ற செயல்பாடுகளை உறுதி செய்த அதிகாரிகள், 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 11-வது பிரிவின் கீழ் 14 நாட்கள் மூடல் உத்தரவைப் பிறப்பித்தனர். அத்துடன், 2009-ஆம் ஆண்டு உணவு சுகாதார விதிமுறைகளின் கீழ் அந்த உணவகத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களுக்குக் கடுமையான உணவு நஞ்சாவதை (Food Poisoning) ஏற்படுத்தும் என்றும் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்யும் இத்தகைய செயல்களைத் தடுக்கத் தீவிர கண்காணிப்பு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


