திட்டங்களைத் தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் - அமைச்சர் நந்தா எச்சரிக்கை

3 பிப்ரவரி 2026, 9:54 AM
திட்டங்களைத் தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் - அமைச்சர் நந்தா எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப் 3: நியாயமான காரணங்களின்றி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் திட்டங்களை முடிக்கத் தவறும் ஒப்பந்ததாரர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என பொதுப்பணி அமைச்சு எச்சரித்துள்ளது.

தோல்வியடைந்த திட்டங்களில் சுமார் 75 விழுக்காடு ஒப்பந்ததாரர்களின் சொந்தக் குறைபாடுகளாலேயே ஏற்படுகின்றன என்பது அமைச்சின் உள்நிலை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். திட்ட மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மையில் உள்ள பலவீனங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் மனிதவளத்தை நிர்வகிப்பதில் உள்ள குளறுபடிகள் போன்றவை இதற்குக் காரணங்களாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

"மக்களின் வரிப்பணம் என்பதால், ஒப்பந்ததாரர்கள் திட்டங்களை மிகுந்த பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகோல்களின்படி பணிகள் நடைபெறாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்," என்று சிபு சிறைச்சாலை கட்டுமானத் திட்டத்திற்கான அனுமதி கடிதங்களை வழங்கும் நிகழ்வில் அவர் பேசினார்.

இருப்பினும், ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உண்மையான சிக்கல்களால் பணிகள் பாதிக்கப்படும் பட்சத்தில், அவற்றை அமைச்சு பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். முடங்கிப்போன அல்லது தாமதமாகும் திட்டங்களை முற்றாக ஒழிக்கும் நோக்கில், பொதுப்பணி அமைச்சு கடுமையான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அவர் கூறினார்.

"ஒரு திட்டம் முடிவடைய நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், அரசாங்கத்தின் திட்டங்களால் மக்கள் பயன்பெறுவதும் தாமதமாகும். இந்தச் சிபு சிறைச்சாலை கட்டுமானத் திட்டத்தைப் பொறுத்தவரை, தாமதம் ஏற்பட்டால் அது மலேசியச் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலையும் நீடிக்கச் செய்யும்," என்று அவர் மேலும் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.