அலோர் ஸ்டார்: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரெஞ்சு நாட்டவர் விடுதலை

3 பிப்ரவரி 2026, 9:45 AM
அலோர் ஸ்டார்: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய பிரெஞ்சு நாட்டவர் விடுதலை

அலோர் ஸ்டார், பிப் 3: மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் கைவசம் வைத்திருந்த எட்டு குற்றச்சாட்டுகளில் இருந்து 34 வயது பிரெஞ்சு நாட்டவர் டோம் பெலிக்ஸ் (Tom Felix) இன்று விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தடுப்புக்காவலில் இருந்த அவர், அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதையடுத்து விடுவிக்கப்பட்டார்.

கெடாவின் அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இவாவானி ஃபரிஸ்தா முகமது (Evawani Farisyta Mohammad), டோம் பெலிக்ஸ் வசம் அந்த போதைப்பொருட்கள் இருந்ததற்கோ அல்லது அவரது கட்டுப்பாட்டில் அவை இருந்ததற்கோ அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முறையான நிரூபணங்களை வழங்கவில்லை எனத் தெரிவித்தார். "எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுகிறார்," என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் வெள்ளைச் சட்டை மற்றும் காற்சட்டை அணிந்து, கைவிலங்குடன் முன்னிலைப்படுத்தப்பட்ட டோம் பெலிக்ஸ், தீர்ப்பைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

'வியோலியா' (Veolia) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான இவர், கைது செய்யப்பட்ட பிறகு உடல் எடை பாதியாகக் குறைந்து காணப்படுவதாக அவரது பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

தீர்ப்புக்குப் பின், அவரது பெற்றோரான ஜீன் லூக் மற்றும் சில்வி பெலிக்ஸ் ஆகியோர் கட்டித்தழுவித் தங்கள் மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தினர்.

வழக்கின் பின்னணி: கடந்த 2023-ஆம் ஆண்டு, லங்காவி தீவில் உணவகம் ஒன்றைத் திறக்கத் திட்டமிட்டிருந்த டோம் பெலிக்ஸ் மற்றும் அவரது மலேசியத் தொழில் கூட்டாளி தங்கியிருந்த வீட்டில் 1.86 கிலோ கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 11.7 கிராம் போதைப்பொருளை அவர் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பெலிக்ஸ் ஆரம்பம் முதலே மறுத்து வந்தார்.

மலேசிய சட்டப்படி, அதிக அளவிலான போதைப்பொருட்களைக் கடத்தினால் மரண தண்டனை அல்லது 104 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 54 பிரம்படிகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பிருந்தது.

தற்போது அவர் விடுதலையாகி உள்ளதைத் தொடர்ந்து, குடிநுழைவு துறை நடைமுறைகளுக்குப் பிறகு அவர் விரைவில் பிரான்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.