மீதமுள்ள உணவுகளைக் கழுவி மறுவிற்பனை செய்ததாகப் புகார்: சிரம்பான் நாசி கண்டார் உணவகம் மீது விசாரணை

3 பிப்ரவரி 2026, 9:43 AM
மீதமுள்ள உணவுகளைக் கழுவி மறுவிற்பனை செய்ததாகப் புகார்: சிரம்பான் நாசி கண்டார் உணவகம் மீது விசாரணை

சிரம்பான், பிப் 3: சிரம்பானில் உள்ள பிரபல நசி கண்டார் உணவகம் ஒன்றில், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்தப் பின் எஞ்சிய உணவுகளைக் கழுவி, மீண்டும் சமைத்து விற்பனை செய்வதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ குறித்து நெகிரி செம்பிலான் மாநில சுகாதாரத் துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சுரைடா முகமது, வைரலான வீடியோ குறித்துத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், பொதுமக்கள் இத்தகைய புகார்களைத் தெரிவிக்க முறையான வழிகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், உணவக ஊழியர் ஒருவர் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் தௌகு (Tauhu) போன்ற எஞ்சிய உணவுகளைத் தண்ணீரில் கழுவி, பின்னர் அவற்றை ஒரு தட்டில் அடுக்கி வைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நள்ளிரவு நேரத்தில் இந்தச் செயலை நேரில் கண்ட ஒரு நபர், அதை வீடியோவாகப் பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் அந்த ஊழியர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி மறைக்க முயன்ற போதிலும், இறுதியில் அந்த உணவுகள் மறுநாள் சமைப்பதற்காகவே கழுவப்படுவதாக ஒப்புக்கொண்டதாக அந்தப் புகார்தாரர் தெரிவித்தார். "

இந்தச் செயல் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, மிகவும் அருவருக்கத்தக்க ஒரு செயலாகும்" என்று அந்தப் பயனர் தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.