ஷா ஆலம், பிப் 2 — பெட்டாலிங் ஜெயாவில் கோயிலை ஒருதலைப்பட்சமாக இடிக்கும் நடவடிக்கையைத் தவிர்த்து அமைதியாக நட்பு முறையான தீர்வுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுபோன்ற செயல் பல மத சமூகத்தில் நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கும்.
ஃப்ரீ மலேசியா டுடே செய்தியின்படி, இன்னொரு சமய தளத்தை இடிப்பது போன்ற செயல்கள் சட்டவிரோதமானவை மற்றும் உன்னத குணம் மற்றும் இணக்கமான அணுகு முறையை வலியுறுத்தும் இஸ்லாமிய கொள்கைகளுக்கு மாறானவை என இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புதுமை நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா கூறினார்
“இஸ்லாமிய அணுகுமுறை மோதல் அடிப்படையிலானது அல்ல. நபிகளாரின் தாவா பெரும்பாலும் நல்ல குணம் மற்றும் உன்னத நடத்தை மூலம் வெற்றி பெற்றது. மக்கள் இஸ்லாத்தை போரால் ஏற்கவில்லை. அதன் நன்மதிப்புகளால் ஏற்றுக்கொண்டனர்” என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுடனான நேர்காணலில் தெரிவித்தார்.
மோதல் நடவடிக்கைகள் பிரச்சினையைத் தீர்ப்பதை விட பிளவை ஏற்படுத்தும் என்று ஃபஹ்மி கூறினார்.
“மிகவும் இணக்கமான மற்றும் மிதமான அணுகுமுறை சிறந்தது. பல மத நாட்டில் அமைதியாக இணைந்து வாழ முடியும். இஸ்லாம் உண்மையான மதம் என்று முஸ்லிம்கள் நம்பினால் கருணை மற்றும் உன்னத குணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இஸ்லாத்தின் நட்பான மற்றும் அணுகக்கூடிய முகத்தை காட்ட வேண்டிய நேரம் இது. பிற மதங்களைப் பின்பற்றுபவர்களுடன் உரையாட தயாராக இருக்கும் முகம்” என்றார்.
கடந்த வாரம், PJS 4, பெட்டாலிங் ஜெயா வில் இஸ்லாமிய அடக்கஸ்தல நிலத்தில் கட்டப்பட்டுள்ள மூன்று முஸ்லிமல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மாற்று இடங்கள் வழங்க மாட்டோம் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
ஜனவரி 23 அன்று தமிம் தஹ்ரி என்பவரின் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட இடம் உண்மையில் நீண்டகாலமாக முஸ்லிமல்லாத வழிபாட்டுத் தலமாக அரசிதழில் வெளியிடப் பட்டது. சூராவ் இடமாக ஒருபோதும் முன்மொழியப் படவில்லை.
அங்கீகரிக்கப்படாத கட்டமைப்புகளை இடிக்க மாநில அரசுக்கு திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் கால அட்டவணை உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இது சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறையின் நீண்ட கால தாமதமான அடக்கஸ்தல வளர்ச்சி பணிகளை தொடங்க அனுமதிக்கும். இது இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்றார்.


