கிடங்கில் தீ ! சீன புத்தாண்டுகான 76.8 டன் மேண்டரின் ஆரஞ்சுகள் முற்றிலும் சேதம்

2 பிப்ரவரி 2026, 3:16 AM
கிடங்கில்  தீ ! சீன புத்தாண்டுகான 76.8 டன் மேண்டரின் ஆரஞ்சுகள் முற்றிலும் சேதம்

கோத்தா பாரு, பிப். 1: இங்குள்ள ஜாலான் கெபூன் சுல்தான் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிடங்கில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 76.8 டன் மேண்டரின் ஆரஞ்சுகள் முற்றிலும் சேதமடைந்தன.

கிடங்கு மேலாளர் ஹோங் லெங் ஃபெங் (40) கூறுகையில், அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பின்னரே இந்தச் சம்பவம் குறித்துத் தமக்குத் தெரிய வந்ததாகத் தெரிவித்தார்.

“இந்த மேண்டரின் ஆரஞ்சுகள் முழுவதும் கிளந்தானுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவை. கோத்தாபாருவில் உள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் இந்தக் கிடங்கிலிருந்தே விநியோகம் பெறுகின்றன,”  என அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தக் கிடங்கு தீ விபத்தில் முழுமையாக அழிந்ததாகவும்,  இதனால் இம்முறை சீனப் புத்தாண்டை முன்னிட்டு மேண்டரின் ஆரஞ்சுகளின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

“மேண்டரின் ஆரஞ்சுகள் மட்டுமின்றி,  இக்கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்த அனைத்து வெங்காயக் கையிருப்புகளும் தீயில் நாசமடைந்து உள்ளன,” என்றார்.

இதற்கிடையில், கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு உதவி இயக்குநர் மொஹ்த் ஃபத்லிசில் இக்ராம் அஹ்மத் பௌசி கூறுகையில்,  இரவு 9.09  மணிக்கு  NG 999 அமைப்பின் மூலம் அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து, துறை வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு அனுப்பப் பட்டனர் என்றார்.

முதல் குழு இரவு 9.16 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்ததுடன், கோத்தா பாரு தீயணைப்பு நிலைய வீரர்கள், கோத்தா  டாருல் நயிம்,  துஞ்சுங் மற்றும் பெங்காலன் சேபா நிலையங்களின் வாட்டர் டாங்கர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டதாக அவர் தெரிவித்தார்.

“LFRT, FRT, ALP, வாட்டர் டாங்கர் மற்றும் EMRS உள்ளிட்ட ஐந்து வாகனங்கள், 11 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன,” என்றார்.

தீ விபத்திற்கான காரணமும், ஏற்பட்ட நட்டத்தை மதிப்பீடும் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், கிடங்குக்குள் இருந்த தட்டைகள் இடிந்து விழுந்ததால் உள்ளே செல்லச் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்கைலிஃப்ட் பயன்படுத்தித் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுவரை இரண்டு லாரிகளும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீயில் எரிந்து நாசமடைந்து உள்ளதுடன், கிடங்கிற்குள் இருந்த அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.