கோலாலம்பூர், ஜன 31 –நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மலேசிய இந்துப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மனிதவள அமைச்சரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன்.
இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தைப்பூசம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது நம்பிக்கை, உறுதி மற்றும் தியாகம் நிறைந்த ஒரு புனிதமான ஆன்மீகப் பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.நேர்த்திக்கடன் செலுத்த பத்துமலை மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், பாதுகாப்பாகவும் இறையருளோடும் தங்களது வழிபாடுகளை நிறைவேற்ற அவர் பிரார்த்திப்பதாக கூறினார்.
இத்திருவிழா சுமூகமாக நடைபெற இரவு பகலாகப் பணியாற்றும் அரச மலேசியக் காவல்துறை (PDRM), பாதுகாப்புப் படையினர் மற்றும் KESUMA தன்னார்வலர்களின் சேவையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
பன்முகத்தன்மையும் பரஸ்பர மரியாதையும் நாட்டின் பலம் என்று சுட்டிக்காட்டிய அவர், மலேசிய மடாணி கொள்கையின் அடிப்படையில் மனிதாபிமானம் மற்றும் நல்லிணக்கத்தோடு ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இத்திருநாள் அமையட்டும் என விருப்பம் தெரிவித்தார்.


