கிள்ளான், ஜன 27: கடந்த 2025ஆம் ஆண்டில் RM341 மில்லியன் மதிப்பீட்டு வரி வசூலைக் கிள்ளான் அரச நகர மன்றம் (எம்பிடிகே) பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட RM60 மில்லியனுக்கும் அதிகமாகும்.
இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை செயல்படுத்தும் கிள்ளான் அரச நகர மன்றத்தின் (எம்பிடிகே) நோக்கத்திற்கு ஏற்ப, இணையம் வழி வரி செலுத்துதல்களில் ஏற்பட்ட அதிகரிப்பாலும் இந்த கூடுதல் வசூல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கிள்ளான் மேயர் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் கூறினார்.
“முன்பை விட RM60 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பீட்டு வரி எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த அதிகரிப்பின் மூலம், நாங்கள் அதிக திட்டங்களை நடத்தலாம், உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை வழங்க முடியும்.
“கிள்ளான் சமூகம், இணையம் வழி வரிகளை செலுத்தத் தொடங்கியுள்ளது. கவுண்டரில் நெரிசலைத் தவிர்க்க இது மிகவும் முக்கியம். இதுவரை, வரவேற்பு ஊக்கமளிப்பதாக உள்ளது, கடந்த ஆண்டு 600,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை நாங்கள் பெற்றோம், ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எம்பிடிகே ஹம்சா மண்டபத்தில் MBDK IPay போர்ட்டல் வழியாக மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கான அதிர்ஸ்ட குழுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
நகர்ப்புற மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்பு, அக்கறை மற்றும் பொறுப்புள்ள வரி செலுத்துவோரைப் பாராட்டுவதற்காக இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதாக அப்துட் ஹமீட் கூறினார்.


