கோல லங்காட், ஜன 25 - கடந்த எட்டு வருடங்களாக அரசியல் துறையில் மக்களுக்கு சேவை வழங்க தன்னை ஈடுப்படுத்தி கொண்ட எலிசா சாம்சன் எமேனுவல் அவர்களை, மீடியா சிலாங்கூர் பேட்டி கண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மோரிப் சட்டமன்ற தொகுதியில் இந்திய சமூக தலைவராகப் பணியாற்றி வந்த அவர், தற்போது கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுமார் 8,000 இந்திய வாக்காளர்கள் கொண்ட மோரிப் தொகுதியில் இந்திய சமூகத் தலைவராகப் பணியாற்றி காலத்தில், மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு சரியான முறையில் அணுகுவது குறித்து தான் நன்கு கற்று கொண்டதாக எலிசா சேம்சன் தெரிவித்தார்.
இந்திய சமூக தலைவராகப் பணியாற்றி போது இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் இல்லாமல் இருப்பது முக்கிய பிரச்சனைகளின் ஒன்றாகும். பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சரியான முறையில் இந்த பிரச்சனையைக் கையாள்வது என்பது பற்றி தெரியாமல் உள்ள நிலையில் தான் பல பேருக்கு உதவியுள்ளதாக எலிசா சாம்சன் கூறினார். மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் கீழ் இயங்கி வரும் மைசெல் திட்டம், அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் குறித்த பிரச்சனைகளை தீர்க்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை பெறவும் எலிசா சேம்சன் பல பேருக்கு உதவியதோடு பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களை பள்ளியில் சரியான முறையில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பல பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது மூலம் கல்வியிலும் தான் கவனம் செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
சில இந்தியர்களின் கிராமத்தில், வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின் மூலம் சாலை பழுதுபார்ப்பு மற்றும் சோலார் விளக்குகளைப் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், மோரிப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் இல்திசாம் சிலாங்கூர் சிஹாட் அட்டையை வைத்திருப்பதாக அவர் பெருமையாகக் கூறினார். இதற்கு தான் கடுமையாக உழைத்திருப்பதாக அவர் சொன்னார்.
அதேசமயம், தீபாவளி பண்டிகை காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பல பேருக்கு எம்பிஐ மூலம் உணவு கூடைகளையும் வழங்கி உதவியிருக்கிறார் எலிசா சாம்சன். பள்ளிக்குத் திரும்புவோம் திட்டத்தில் அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயன் பெற வேண்டும் என எம்பிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டு பின் அது செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சியாக சொன்னார்.
தற்போது கோல லங்காட் நகராண்மை கழக உறுப்பினராகப் பதவியேற்றள்ள எலிசா சாம்சன் எமேனுவல் தொடர்ந்து மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு சிறந்த சேவை ஆற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.


