நீண்ட விடுமுறை காரணமாக 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகையை பத்துமலை  எதிர்பார்க்கிறது.

25 ஜனவரி 2026, 5:16 AM
நீண்ட விடுமுறை காரணமாக 2.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகையை பத்துமலை  எதிர்பார்க்கிறது.

 கோலாலம்பூர், ஜனவரி 25 — இந்த ஆண்டு தைப்பூச விழாவிற்கு பத்துமலைக்கு 2.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. நீண்ட விடுமுறை காரணமாக கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் கோவில் நிர்வாகி டத்தோ சிவகுமார் நடராஜா கூறுகையில், பக்தர்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், பொது வருகையாளர்கள் உள்ளிட்டோர் விழா காலம் முழுவதும் வருவார்கள் என்பதை கணக்கில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

“கடந்த ஆண்டு 4 முதல் 7 நாட்களில் சுமார் 2.5 மில்லியன் பேர் வந்தனர். இந்த ஆண்டு நீண்ட விடுமுறை இருப்பதால் இன்னும் அதிக எண்ணிக்கை எதிர்பார்க்கப் படுகிறது,” என்று அவர் பெர்னாமா விடம் தெரிவித்தார்.

தைப்பூசம் ஞாயிறு (பிப்ரவரி 1) அன்று வருகிறது; அது கூட்டரசு பிரதேச நாளுடன் ஒத்துப்போகிறது. விழா சுமூகமாக நடைபெறுவதற்கு பாதுகாப்பு மற்றும் சுத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது 2026 வருகை மலேசியா பிரச்சாரத்திற்கு ஏற்ப அமையும் என்று சிவகுமார் கூறினார். கோவில் நிர்வாகம் மலேசிய அரச போலீசார் (PDRM) உடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல் படுகிறது. கூட்ட நிர்வாகம், ஊர்வலக் கட்டுப்பாடு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் PDRM கையாளும்.“பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு PDRM முழு செயல்பாட்டுக் கட்டுப்பாடு கொண்டிருக்கும். செந்துல் மற்றும் டாங் வாங்கி மாவட்டங்களிலிருந்து காவலர்கள் நியமிக்கப்படுவர்; கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் ஆதரவுடன். பத்துமலை பகுதியை சிலாங்கூர் தலைமையகத்தின் உதவியுடன்  கோம்பாக் மாவட்ட போலீசார் நிர்வகிப்பர்” என்றார்.

சுத்தம் தொடர்பாக, பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சிவகுமார் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக குப்பை போடுதல் மற்றும் காலணிகளை தூக்கி எறியும் பிரச்சனையை குறைக்க வேண்டும்.“கடந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று டன் காலணிகள் குப்பையாக மாறின. வழிபாட்டிற்காக காலணிகளை கழற்றும் மரபை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் வருகையாளர்கள் அவற்றை காரில் விட்டுவிட்டு வரலாம் அல்லது ஒரு பை எடுத்துக்கொண்டு வரலாம்; இது குப்பையை குறைக்க உதவும்,” என்றார்.
20 ஆண்டுகள் பழமையான ஆண்டவர் முருகன் சிலையின் மேம்பாட்டுப் பணிகள் இப்போது முடிவடைந்துள்ளதாகவும் சிவகுமார் உறுதிப் படுத்தினார். புதிய விளக்கு அமைப்பு பொருத்தப் பட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவின் முக்கிய ஈர்ப்பாக இது அமையும். “இந்த சிலை 2006-இல் முதலில் நிறுவப்பட்டது. இந்த ஆண்டு மேம்பாட்டில் கூடுதல் விளக்கு அமைப்பு பொருத்தப் பட்டது.

இது பக்தர்கள் மட்டுமல்லாமல் உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கும் முக்கிய ஈர்ப்பாக அமையும்,” என்றார்.
அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.