சிலாங்கூர் புது கிராம விழா ஆண்டுதோறும் நடத்தப்பட வாய்ப்புள்ளது — செயற்குழு உறுப்பினர்

25 ஜனவரி 2026, 4:34 AM
சிலாங்கூர் புது கிராம விழா ஆண்டுதோறும் நடத்தப்பட வாய்ப்புள்ளது — செயற்குழு உறுப்பினர்

கிள்ளான், ஜனவரி 24 — "ஜோம் திட் தோ லா!" (Jom Thit Tho Lah!) என்ற குறிக்கோளுடன் நடைபெறும் சிலாங்கூர் புது கிராம விழா 2026 (Selangor New Village Fiesta), ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நிகழ்வாக மாற்றப்பட வாய்ப்புள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் சமூகங்களின் தனித்துவம் மற்றும் பாரம்பரியத்தை விளம்பரப்படுத்த, புதிய கிராமங்களுக்கு இடையே சுழற்சி முறையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப் படலாம். உள்ளூர் அரசாங்கம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான மாநிலச் செயற்குழு உறுப்பினர் டத்தோ’ இங் சுய் லிம் (Dato’ Ng Suee Lim) கூறுகையில், இந்த திருவிழா மாநிலத்தின் 77 புதிய கிராமங்கள், மீனவக் கிராமங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கிராமங்களை பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கான ஒரு சிறந்த தளமாக செயல்படும் என்றார்.

அவரின் கூற்றுப்படி, புதிய கிராமங்கள் என்பவை சீனச் சமூகத்தில் பலர் வளர்ந்த இடங்களாகும், மேலும் அதில் பல இனிய நினைவுகள் இருப்பதால், கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்தும் முயற்சிகளில் இந்த திருவிழா நடத்துவது மிகவும் முக்கியமானது. "பொதுமக்கள் ஒவ்வொரு புதிய கிராமம் மற்றும் மீனவ கிராமத்தின் தனித்துவத்தை அறிந்து கொள்ளவும், விளம்பரப்படுத்தவும், ஆராய்ந்து கண்டறியவும் சிலாங்கூர் புதிய கிராமத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக இளைஞர்கள் புதிய கிராமங்களின் கதைகள் மற்றும் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் இது கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்ச்சிக்கு மிகவும் அவசியமானது" என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற சிலாங்கூர் புதிய கிராமத் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். புதிய கிராமங்களின் வளர்ச்சிக்கு இளைய தலைமுறையினரின் பங்களிப்பும் தொடர்ச்சியும் அவசியம் என்று இங் கூறினார்.

"மாநில அரசாங்கம் சிலாங்கூரின் புது கிராமங்களின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சுற்றுலா திறனை வெளிப்படுத்து- வதற்காக இதுபோன்ற திருவிழாக்களை ஏற்பாடு செய்கிறது. அதே நேரத்தில், வருகையாளர்கள் மாநிலத்தில் அதிக நாட்கள் தங்கும்படி ஊக்குவித்து, அதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை தூண்டிவிடவும் விரும்புகிறேன்" என்றார்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் சபாநாயகர் லவ் வெங் சான் (Lau Weng San), பாண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் டக் சீ (Leong Tuck Chee), புக்கிட் லாஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் (Pua Pei Ling), பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் க்வா பெர்ங் ஃபெய் (Dr Quah Perng Fei), லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சையது அகமது அப்துல் ரஹ்மான் அல்ஹதாத் (Syed Ahmad Abdul Rahman Alhadad), பலாகோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சூன் வெய் (Ong Chun Wei), கிள்ளான் மேயர் டத்தோ அப்துல் ஹமீத் உஸைன் (Datuk Abd Hamid Hussain) மற்றும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் (MOTAC) சுற்றுலாத்துறை துணைச் செயலாளர் ஜெனரல் சுவா சூன் ஹ்வா (Chua Choon Hwa) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு மற்ற புது கிராமங்களுக்கு ஒரு மாதிரியாக (model) செயல்பட வேண்டும் என்றும், தேசிய அளவிலான திருவிழா அளவுகோலாக கருதப்பட்டு, ஆண்டுதோறும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்றும் இங் விரும்பினார்.

"சிலாங்கூரின் புதிய கிராமங்கள் வெறும் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்ல, மாறாக பல இன சமுதாய சகோதரத்துவம், கூட்டுறவு உணவு மற்றும் விலைமதிப்பற்ற உள்ளூர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வரலாற்று மற்றும் கலாச்சார செல்வங்களாகும்" என்று அவர் கூறினார்.

மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் டூரிசம் சிலாங்கூர் (Tourism Selangor) ஏற்பாடு செய்துள்ள இந்த விழா, இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பாண்டமாரான் பி சீனப் பள்ளியில் (SJKC Pandamaran B) நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் 'ஜாலான்-ஜாலான்' (Jalan-Jalan - உலா), 'மாக்கான்-மாக்கான்' (Makan-Makan - உணவு), 'பெலி-பெலா' (Beli-Belah - கடையடி), 'ஹிபூரான்' (Hiburan - பொழுதுபோக்கு), 'பெர்காம்பார்' (Bergambar - புகைப்படம் எடுத்தல்) மற்றும் 'க்ரியாடிவிட்டி' (Kreativiti - படைப்பாற்றல்) என ஆறு முக்கிய கருப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன.

இது வருகையாளர்கள் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் புதிய கிராம வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றலை மீண்டும் கண்டறிய உதவுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.