கோலாலம்பூர், ஜன 23 - இன்று அதிகாலை 3.30 மணி அளவில், இஸ்தானா நெகாராவின் இரண்டாவது நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புத் தடுப்பை, வாகனமோட்டி ஒருவர் மோதி அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், 21 வயதான அந்த வாகனமோட்டி மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த வாகமோட்டி டொயோட்டா வியோஸ் ரக காரில், புக்கிட் டமான்சாராவிலிருந்து பயணித்து வந்தபோது, இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கோலாலம்பூர், போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தலைவர் ஏசிபி முஹமட் சம்சூரி முகமட் இசா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அந்த வாகனத்தின் முன்புறம் மற்றும் நுழைவாயிலில் உள்ள தடுப்பு கம்பமும் வாயிலும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைப் பெற்றதோடு ஓட்டுநரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். மேலும், அவரிடம் சுவாசப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக முகமட் சம்சூரி கூறினார்.
``சோதனையில் ஓட்டுநரின் உடலில் 100 மில்லிலிட்டர் இரத்தத்தில் 166 மில்லிகிராம் மது இருப்பது கண்டறியப்பட்டது. இது அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப்பிரிவு 45A(1) இன் கீழ் ஓட்டுநர் மீது குற்றம் சாட்ட துணை அரசு வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டதாகவும், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அவர் கொண்டு வரப்படுவார் என்றும் முகமட் சம்சுரி கூறினார்.
பெர்னாமா


