ஷா ஆலம், ஜன 23: சீனப் புத்தாண்டை முன்னிட்டு மொத்தம் 650 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் பந்திங் மாநில சட்டமன்ற பகுதியில் உள்ள தகுதியுள்ள பெறுநர்களுக்கு விநியோகிக்கப்படும்.
அடையாளம் காணப்பட்ட பெறுநர்களுக்கு அடுத்த மாதம் இந்த வவுச்சர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு பந்திங் தொகுதியில் 647 பயனாளிகள் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
2026 சீனப் புத்தாண்டு ஜோம் ஷோப்பிங் வவுச்சர் திட்டம் மாநில அளவில் செயல்படுத்துவதற்காக, மொத்தம் 26,000 பயனாளிகள் RM5.2 மில்லியன் செலவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகப் பந்திங் மாநில சட்டமன்ற உறுப்பினரான பாப்பாராய்டு கூறினார்.
இந்த எண்ணிக்கையில் ஆட்சிக்குழு உறுப்பினர் கூடுதலாக வழங்கிய 1,000 வவுச்சர்களும் அடங்கும். அவை தேவைப்படும் தொகுதிகளுக்கு வழங்கப்படும் என பாப்பாராய்டு தெரிவித்தார்.
வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு மூலம் 2012 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வருடாந்திர திட்டம், குறைந்த வருமானம் கொண்டவர்கள் முக்கிய பண்டிகைகளுக்குத் தயாராக உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பாப்பாராய்டு விளக்கினார்.
இந்த ஆண்டு ஜோம் ஷாப்பிங் பெராயான் திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட RM2 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்த ஒதுக்கீடு RM18.48 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஹரி ராயா ஐடில்ஃபிட்ரி, சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்டங்களை உள்ளடக்கிய 94,200 பயனாளிகளை இலக்காகக் கொண்டுள்ளது.


